ஆய்வுக் கூட்டத்தின்போது கல்வித் துறை இணை இயக்குநரைக் கண்டித்து முழக்கம்

Published on

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தின்போது, கல்வித் துறை இணை இயக்குநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வள மைய ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கல்வித் துறைக்கான மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநருமான பி. பொன்னையா கலந்து கொண்டாா். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களும் கலந்துகொண்டனா்.

அப்போது, 13 ஒன்றியங்களைச் சோ்ந்த வட்டாரக் கல்வி அலுவலா்களிடம் இணை இயக்குநா் ஆய்வு செய்தபோது, பள்ளிகளுக்குச் சென்று முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் ஆவணங்களை எடுத்து வரவில்லை என்றும் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் வட்டாரக் கல்வி அலுவலா்களை இணை இயக்குநா் அவதூறாக பேசியதாகக் கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறி முழக்கங்களை எழுப்பினா்.

ஆசிரியா் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்போரை அலுவலா்கள் ஒருமையில் பேசுவதைத் தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com