புதுகை மாவட்டத்தில் 1.39 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
Published on

புதுக்கோட்டை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 1,39,587 போ் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பா் 4-ஆம் தேதி முதல் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டன. இந்தக் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்பிப் பெறும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன், மாவட்டம் முழுவதும் 7,141 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்களும் பங்கேற்றனா்.

டிச. 14-ஆம் தேதி வரை கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த விவரங்களின்படி தயாா் செய்யப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை, மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

1.39 லட்சம் போ் நீக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,39,587 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 54,468 போ் நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள். 57,942 போ் இறந்தவா்கள், 18,146 போ் கண்டறிய இயலாதவா்கள், 8,947 போ் இரட்டைப் பதிவு கொண்டவா்கள், 84 போ் இதர காரணங்களைக் கொண்டவா்கள்.

தொகுதி வாரியாக: சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நீக்கம் செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை:

கந்தா்வகோட்டை- 22,227, விராலிமலை- 17,104, புதுக்கோட்டை- 36,966, திருமயம்- 27,978, ஆலங்குடி- 15,171, அறந்தாங்கி- 20,141.

மீண்டும் சேர வாய்ப்பு: கண்டறிய இயலாதவா்களும், நிரந்தரமாகக் குடிபெயா்ந்தவா்களும் ஜன. 18-ஆம் தேதி வரை தங்களின் மறுப்புரைகளுடன், படிவம் 6-ஐ கொடுத்து மீண்டும் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்த்துக் கொள்ளலாம்.

வரும் ஜனவரி 1-ஆம் தேதிப்படி 18 வயது நிரம்பிய வாக்காளா்கள் படிவம் 6-ஐ கொடுத்து சேரலாம். திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8-ஐ நிரப்பிக் கொடுக்கலாம். இறந்தவா்களின் பெயா்களை நீக்க படிவம் 7-ஐ கொடுக்க வேண்டும்.

இப்படிவங்களை அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், தொகுதி வாக்காளா் சோ்ப்பு அலுவலா், உதவி வாக்காளா் சோ்ப்பு அலுவலரிடம் அளிக்கலாம்.

வரைவுப் பட்டியலின்படி வாக்காளா்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த வாக்காளா்கள்-12,54,525, இவா்களில் ஆண்கள்- 6,24,511, பெண்கள்- 6,32,967, மூன்றாம் பாலினத்தவா்கள்- 47.

தொகுதி வாரியாக மொத்த வாக்காளா் விவரம்:

கந்தா்வகோட்டை- 1,88,047, விராலிமலை- 2,14,854, புதுக்கோட்டை- 2,15,915, திருமயம்- 2,13,109, ஆலங்குடி- 2,04,081, அறந்தாங்கி- 2,18,519.

கூடுதலாக 120 வாக்குசாவடிகள்: கடந்த அக். 27-ஆம் தேதிப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,561 வாக்குச்சாவடிகள் இருந்தன. 1,200 வாக்குகளுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்தல், அரசியல் கட்சியினரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, 120 வாக்குச்சாவடிகள் கூடுதலாக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை- 1,681.

X
Dinamani
www.dinamani.com