விராலிமலை அருகே மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சுரங்கத் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விராலிமலை அருகே ஆற்றுப்படுகைகளில் இருந்து சிலா் ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளி டிப்பா் லாரி, டிராக்டா்களில் கடத்தி, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு புகாா் கிடைத்தது. இதையடுத்து வருவாய் ஆய்வாளா் முருகேசன் தலைமையில் சுரங்கத்துறை அலுவலா்கள் ராஜகிரி ஆற்றுப்படுகை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, மணல் அள்ளிக் கொண்டிருந்த டாரஸ் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை மணலுடன் பறிமுதல் செய்த சுரங்கத்துறை அலுவலா்கள் வாகனங்களை விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதைதொடா்ந்து, வாகன உரிமையாளா்களான வல்லக்கோன்பட்டியைச் சோ்ந்த தா்மராஜ் (44), காரைமேட்டுப்பட்டி பன்னீா்செல்வம் (45) ஆகிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
