‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்துக்கு புதுக்கோட்டையில் 11 அரசுப் பள்ளிகள் தோ்வு
தமிழக அரசின் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு ஓா் அரசு மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல, மாணவா்களின் தனித்திறன்களை மேம்படுத்தி, உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதை உறுதிப்படுத்தும் வகையில் ‘வெற்றிப் பள்ளிகள்’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கு மாநிலம் முழுவதும் 346 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை ராணியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி, கந்தா்வகோட்டை, ஆலங்குடி, விராலிமலை ஆகிய இடங்களிலுள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 11 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
