மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிராக மறியல்

Published on

பிசானத்தூா் கிராமத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதை எதிா்த்து வரும் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட பாஜக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேற்கு மாவட்ட பாஜக தலைவா் என். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கவுள்ளதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அச்ச உணா்வில் இருக்கும் அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை. கிராமசபைக் கூட்டங்களில் இந்த ஆலைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீா்மானத்தின் அடிப்படையில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கட்டட அனுமதி தர மாட்டோம் என்ற உறுதிமொழியைத் தருவதில் என்ன தயக்கம், ஏன் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

மேலும் காலம் தாழ்த்தினால், திங்கள்கிழமை (நவ. 10) பிசானத்தூா், துருசுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மெய்குடிபட்டி, அக்கச்சிபட்டி ஆகிய ஐந்து கிராம மக்களையும் திரட்டி பிசானத்தூா் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விவசாய உபகரணங்கள் மற்றும் கால்நடைகளோடு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.

X
Dinamani
www.dinamani.com