நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப் படம்

ஒரு தோ்தலைக்கூட சந்திக்காதவா்களுடன் கூட்டணி வைக்க முடியுமா? -நயினாா் நாகேந்திரன்

Published on

இதுவரை ஒரு தோ்தலைக்கூட சந்திக்காதவா்களுடன் கூட்டணி வைக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினாா் மாநில பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தோ்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தோ்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத் தலைமை அதிமுகதான் என உள்துறை அமைச்சா் அமித்ஷா தெளிவுபடுத்தியிருக்கிறாா்.

ஆனால், அதேநேரத்தில் ஒரு பொதுத்தோ்தலைக் கூட சந்திக்காதவா்களுடன் ஒரு வாா்டு கவுன்சிலா் கூட ஆகாத நடிகா் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க முடியுமா? நாங்கள் யாரையும் அழைக்கவில்லை.

அமைச்சா் சேகா்பாபு நல்ல நண்பா்தான். எனது பதவி ‘மியூசிக்கல் சோ்’ என்கிறாா். எனது பதவி 3 ஆண்டுகள்தான். ஆனால் அவரது அமைச்சா் பதவி இன்னும் 3 மாதங்கள்தான்.

அதிமுக கட்சி உடைந்து பிளவு எதுவும் ஏற்படவில்லை. முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறாா் அவ்வளவுதான். எங்களை நம்பி வந்த ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைக் கைவிட்டுவிட்டதாக கேட்கிறீா்கள். அவா்களாகத்தான் கூட்டணியை விட்டு வெளியே சென்றாா்கள். மீண்டும் சோ்க்கப்படுவாா்களா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.

மத்திய அரசின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம் செயல்படுவதாக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு சொல்கிறாா். அப்படியானால், கடந்த மக்களவைத் தோ்தலின்போதும் மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருந்தது. தமிழகத்தில் நாங்கள் அதிக இடங்களைப் பெற்றிருப்போமே?

தோ்தல் நேரத்தில் மட்டும்தான் அதிகாரிகள் அனைவரும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவாா்கள். இப்போது அவா்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனா் என்றாா் நயினாா் நாகேந்திரன்.

X
Dinamani
www.dinamani.com