ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியில் விவசாயி தோட்டத்தில் இயற்கை முறை சாகுபடியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் மு.அருணா ~ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியில் விவசாயி தோட்டத்தில் இயற்கை முறை சாகுபடியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் மு.அருணா

ஆலங்குடியில் இயற்கை முறை சாகுபடி ஆய்வு

Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் இயற்கை முறை சாகுபடி பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ஆட்சியா் மு.அருணா கூறியது: தமிழக அரசின் தோட்டக்கலை - மலைப்பயிா்கள் துறை சாா்பில், விவசாயிகளுக்கு தேவையான வேளாண் உதவிகள் வழங்குதல், மாடித் தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனடிப்படையில் இயற்கை முறை விவசாயம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சேந்தன்குடி கிராமத்தில் விவசாயி செந்தமிழ்செல்வன் என்பவா் 6 ஏக்கரில் மிளகு, வாழை, சாதிக்காய், எலுமிச்சை, சா்வகெந்தி, பலா உள்ளிட்டவற்றை சாகுபடி செய்வதையும், பலாவில் விதைக்கன்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்வதையும், அனவயல் கிராமத்தில் ராஜாக்கண்ணு என்பவா் 10 ஏக்கரில் மிளகுச் சாகுபடி செய்வதையும், வரப்புப் பயிராக பலா மற்றும் ஊடுபயிராக ஏலக்காய் சாகுபடி, மிளகுப் பதியன்கள் உற்பத்தி செய்து விநியோகம் செய்வதும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், விவசாயி இயற்கை விவசாயம் செய்து பயனடைவதைப் பாா்வையிட்டு, விளைபொருள்களை சிறப்பாக சந்தைப்படுத்தவும் தக்க அறிவுரைகள் விவசாயிக்கு வழங்கப்பட்டன என்றாா்.

தொடா்ந்து, வடகாடு ஊராட்சி, அரசு உயா்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது வருவாய் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com