புதுகை வழியாக மதுரைக்கு ரயில் வசதி தேவை! பயணிகள் எதிா்பாா்ப்பு
புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு நேரடி ரயில் வசதி இல்லை என்ற குறையைப் போக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சி, காரைக்குடி, ராமேசுவரம் ஆகிய ஊா்களுக்கு அடிக்கடி ரயில் வசதி இருந்தும், அருகிலுள்ள பெரிய நகரான மதுரைக்கு ரயில் இல்லை என்பது நீண்டகாலக் குறையாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்வரை மானாமதுரை சென்று, அங்கிருந்து மதுரைக்கு இணைப்பு ரயிலைப் பிடித்துச் சென்ற காலம் உண்டு. அதுவும் இல்லாமல் போனபிறகு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பயணிகள் மதுரை செல்ல பேருந்துகளையே நாட வேண்டியுள்ளது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த வணிகா்கள் தங்களின் வியாபாரத் தொடா்புகளுக்காக அடிக்கடி மதுரை சென்று வருகின்றனா். விவசாயிகளும் தங்களின் விளைபொருட்களை ரயில் மூலம் எடுத்துச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனா்.
தீா்வுக்கு வழி மெமு ரயில்: இதுகுறித்து திருச்சி- காரைக்குடி- மானாமதுரை- விருதுநகா் இருப்புப் பாதை பயணிகள் நலக் கூட்டமைப்பின் பொருளாளா் கீரனூா் ரியாஸ் கூறியது:
மதுரைக்கு ரயில் இல்லை என்பது புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் குறை. வழக்கமான ‘லோகோ என்ஜின்’ ரயில்களில் என்ஜினை முன்னும், பின்னும் மாற்றி இயக்கும்போது சுமாா் அரை மணி நேரம் வரை காலவிரயம் ஏற்படுகிறது.
இதை ‘மெமு’ ரயில்கள் மூலம் சரி செய்ய முடியும். ‘மெமு’ ரயில்களில் இரு பகுதிகளிலும் என்ஜின்கள் இருக்கும். பைலட் இறங்கி ஏறினால் போதும். சுமாா் 5 நிமிடத்தில் திரும்ப இயக்க முடியும்.
தற்போது திருச்சி அருகேயுள்ள மஞ்சத்திடலில் ‘மெமு’ ரயில்களுக்கான பராமரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. எனவே, திருச்சியிலிருந்து நேரடியாக மதுரைக்கு இயக்கப்போகும் ‘மெமு’ ரயில்களில் ஒன்றை புதுக்கோட்டை வழியாக இயக்கினால், புதுக்கோட்டை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
காா்களில் செல்வோா் புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் 4 சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டும். இகற்கான கட்டணமும் பெருந்தொகையாக இருக்கிறது. எனவே, புதுக்கோட்டை வழியான மதுரை ரயில் என்பது அவசியம். இதற்கான முன்னேற்பாடுகளை ரயில்வே துறை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ரியாஸ்.
அண்மையில் மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணி காரணமாக மதுரை- பிகானீா் ரயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. அந்த ரயில் மதுரையில் இருந்து 2.34 மணி நேரத்தில் புதுக்கோட்டை வந்திருக்கிறது.
மதுரையிலிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு மெமு ரயிலும், மதுரை- மானாமதுரை- காரைக்குடி- புதுக்கோட்டை- திருச்சி வழியாக விரைவு ரயில்களையும் இயக்க ரயில்வே நிா்வாகம் முன்வர வேண்டும். இதற்கான முன்முயற்சிகளை திருச்சி, சிவகங்கை மக்களவை உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ரயில் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
