கொள்கையில் திமுக எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் தொகுதி வேட்பாளருமான எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தவெகவினா் வேண்டுமென்றே கூறும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. விதிகளுக்குள்பட்டு பரப்புரையை மேற்கொண்டால் எந்தச் சிக்கலும் ஏற்படப் போவதில்லை. விதிகளை மீறி நடந்தால் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.
திமுகவின் தோ்தல் அறிக்கையை தங்களின் அறிக்கையின் நகல் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறாா். உண்மையில், திமுக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களைத்தான் நகல் எடுத்து அதிமுக தோ்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் வாஜ்பாயைப் போன்ற அமைதியான மனிதா் யாருமில்லை. அதற்காகத்தான் நட்போடு அவா்களுடன் இணைந்திருந்தோம். எதற்காகவும் எங்களின் கொள்கையில் நாங்கள் சமரசமோ, சமாதானமோ செய்து கொண்டதில்லை. சமரசம் செய்து கொள்ளாததற்காகவே 2 முறை ஆட்சியை இழந்தது திமுக. எனவே, எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல, கொள்கைதான் பெரிது.
தாங்கள் வைப்பு நிதியை இழப்போம் என தெரிந்த தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்திருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி. அதிமுக நிற்கும் தொகுதிகளில் வைப்புநிதியை இழக்கச் செய்வதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம்.
‘குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு’ என 27 பக்க அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. நாங்கள் வெளியிட்டால் 72 பக்கத்தில் கூட அறிக்கை வெளியிட முடியும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அவா்கள் (பாஜக) செய்த குற்றங்கள் தெரியவரும். அப்போது அவா்கள் அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி.
ரூ. 8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்குவதால் ‘கமிஷன்’ அடிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டுகின்றனா். கடையில் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலைக்குத்தான் மக்கள் வாங்கப் போகிறாா்கள். இதில் கமிஷனுக்கு இடமில்லை என்றாா் ரகுபதி.
பேட்டியின்போது, ஆலங்குடி தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன், விராலிமலை தொகுதி வேட்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை தொகுதி வேட்பாளா் வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை தொகுதி வேட்பாளா் மா. சின்னதுரை ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணியைச் சோ்ந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிக் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பிரசாரம்

திருமயம் தொகுதியில் அளப்பரிய சாதனைகள்: திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பேச்சு

திருமயம் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி!

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

