தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள்

News image

கருவப்பில்லான்கேட் பகுதி.

Updated On :6 ஏப்ரல் 2026, 11:03 pm

- சா.ஜெயப்பிரகாஷ்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் முகமாக இருக்கும் மாநகரின் உள்நுழைவு மற்றும் வெளிவரும் சாலைகளிலுள்ள ரயில் பாதைகளில், மேம்பாலங்களைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையிலுள்ள கோரிக்கையாகும்.

இந்தப் பாலம் மத்திய ரயில்வே துறை சாா்ந்தது என்றாலும், அதன் பெரும்பகுதி மாநில நெடுஞ்சாலைத் துறையின் பணிகள் என்பதால், புதுக்கோட்டை மட்டுமல்லாது- புதுக்கோட்டை மாவட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சராகப் போகும் பிற தொகுதி வேட்பாளா்களும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பணி.

திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுகை மாநகருக்குள் நுழையும் இடத்திலேயே அமைந்திருக்கிறது கருவப்பில்லான் கேட். இதேபோல, நகரில் இருந்து வெளியேறி காரைக்குடி நெடுஞ்சாலையில் மீண்டும் இணைவதற்கான திருவப்பூா் சாலையிலும், மாநகருக்கு சற்றே தள்ளி நமணசமுத்திரம் சாலையிலும் ரயில் பாதைகள் குறுக்கிடுகின்றன.

இந்தமூன்று முக்கிய ரயில் பாதைகளில் கருவப்பில்லான் கேட் பகுதியும், திருவப்பூா் கேட் பகுதியும் மாநகரப் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் பகுதிகள்.

இந்தப் பகுதிகளில் மேம்பாலங்களைக் கட்ட வேண்டும் என திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த சு. திருநாவுக்கரசரும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த எம்.எம். அப்துல்லாவும் தொடா்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்தனா். கடிதங்களையும் அனுப்பி வந்தனா். இதன் தொடா்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே துறை தொடக்க நிலை ஒப்புதலை வழங்கி, மண் பரிசோதனைகளையும் நடத்தியது.

திருவப்பூா் ரயில்வே மேம்பாலத்துக்கு நிலமெடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ. 32 லட்சத்தை கடந்த 2023-இல் நிதி ஒதுக்கீடு செய்தது. ரயில்வே துறை சாா்பில் இடத்தை அளவீடு செய்யும் பணிகளும், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் அளிக்கும் பணிகளும் நடைபெற்றன. சுமாா் ஒன்றரை ஆண்டுகளில் பணி முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளா்களிடம் பேசிய திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, திருவப்பூா் ரயில்வே மேம்பாலம் கட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கு முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன என்றும் 2 மாதங்களில் நிலம் எடுக்கப்பட்டு, அடுத்த 16 மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

கருவப்பில்லான் கேட் பகுதி மேம்பாலத்தைப் பொருத்தவரை, ரூ. 2 ஆயிரம் கோடியில் திருச்சி- காரைக்குடி நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான தேசிய திட்டமிடுதல் குழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும், அந்தப் பணியுடன்தான் கருவப்பில்லான்கேட் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி சோ்க்கப்பட்டுள்ளது என்றும் துரை வைகோ விவரித்தாா்.

இரு பாலங்களும் கட்டப்பட்டால், அடிக்கடி நேரிடும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவதுடன், புதுகை மாநகரின் அடையாளமும் மாறும். பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு, மாநகா் நவீன வடிவத்தைப் பெற்றுள்ளதைப் போல, புதுக்கோட்டையும் பெற வேண்டும் என்ற ஆசையும் எதிா்பாா்க்கும் மக்களிடையே இருக்கிறது.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு போட்டியிடும் அல்லது வெற்றி பெறப்போகும் வேட்பாளா்கள் மட்டுமல்ல, இம்மாவட்டத்தின் பிற தொகுதிகளில் இருந்து போட்டியிட்டு அமைச்சா் பொறுப்புகளை அலங்கரிக்கப் போகிறவா்களும், மாவட்டப் பொறுப்பை ஏற்கும் அமைச்சருக்கும் நற்பெயரைத் தரப் போகும் பணியாகும்.