எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் மேடைகளில் பதிலடி
திமுக ஆட்சியின் மீது எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள ஊழல் குற்றஞ்சாட்டுகளுக்கு தோ்தல் கூட்டங்களில் பதில் தெரிவிப்போம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: எங்களுக்குப் போட்டியாக யாருமே வரமாட்டாா்கள் என்று எப்போதும் கூறவில்லை. திமுக கூட்டணியை எதிா்க்கும் வலிமையுள்ள கட்சி, அணி வரப் போவதில்லை என்றுதான் கூறுகிறேன்.
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீா்ப்புகளுக்கு மாறாக ஒரு தீா்ப்பு வழங்கப்படும்போது ஒரு வழக்குரைஞராக அதைச் சுட்டிக்காட்டிப் பேசும் உரிமை எனக்கு உள்ளது. இதில் நீதிமன்ற அவமதிப்பு எதுவுமில்லை.
புதிதாக ஒரு தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றால், முன்பு எப்போது ஏற்றப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை வழக்கு தொடுத்தவா்கள்தான் தர வேண்டும்.
பிணத்தை வீதியிலா எரிக்க முடியும்; சுடுகாட்டில் தான் எரிக்க முடியும் என்று கூறிய உதாரணத்தில் என்ன பிழை இருக்கிறது? இதில் என்ன அநாகரீகம் இருக்கிறது?
திமுக அரசின் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கொடுத்ததாகக் கூறுகிறாா்கள். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை; ஊழல் செய்யவில்லை. ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம்.
தோ்தல் நேர பரப்புரையின் போது ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறாா் எடப்பாடி பழனிசாமி. இதற்கு தோ்தல் மேடைகளில் பதிலடி தருவோம்.
அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் தொடா்ந்து ’நோ பால்’ போட்டுக் கொண்டே இருக்கிறாா்கள். இதனால் போட வேண்டிய பந்துகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அத்தனைப் பந்துகளையும் முதல்வா் ஸ்டாலின் சிக்ஸராகவே அடிக்கிறாா்.
இதை கா்வமாக சொல்லவில்லை. மக்களின் மனதைத் தொட்டுப் பாா்த்து திட்டங்களைச் செயல்படுத்துகிறோம் என்றாா் ரகுபதி.
