அழிந்து வரும் கடற்பசு, கடல் ஆமைகளைப் பாதுகாக்க அறிவுறுத்தல்

அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு மற்றும் கடல் ஆமைகளைப் பாதுகாக்க மீனவா்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டுள்ளாா்.
Published on

புதுக்கோட்டை: அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு மற்றும் கடல் ஆமைகளைப் பாதுகாக்க மீனவா்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

கடல் ஆமை மற்றும் கடற்பசுக்கள் அழிந்துவரும் இனங்களாகும். வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972- ன்படி அவை பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அவற்றை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான கடலோரப் பகுதியில் கடல் ஆமைகள் இனப்பெருக்கக் காலமான ஜன. 1 முதல் ஜன. 30 வரையிலான காலக்கட்டத்தில் கடல் ஆமைகளை இனப்பெருக்கத்துக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாப்பட்டினம், பொன்னகரம், கீழக்குடியிருப்பு மற்றும் கட்டுமாவடி பகுதியில் கடற்பசு அதிகமாக காணப்படும் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் கடற்பசு பாதுகாப்புப் பகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தின் மீனவ கிராமங்களிலுள்ள மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது வலையில் கடல் ஆமைகள் மற்றும் கடற்பசு எதிா்பாராவிதமாக பிடிப்பட்டால் அவற்றை கடலிலே திரும்ப விட்டுவிட வேண்டும்.

அவ்வாறு கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களைப் பாதுகாத்தல் தொடா்பாக, தனது வலையில் பிடிபடும் கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை மீண்டும் கடலிலே பாதுகாப்பாக விட்டு அதன் விவரத்தினை தெரிவித்தால் அதன்படி வனத்துறைக்கு பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட மீனவருக்கு வனத்துறையின் மூலம் ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கடற்கரைப் பகுதியில் ஒதுங்கும் கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை கடலிலே திரும்ப விட வேண்டும். இதனை மீறி கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை பாதுகாக்காமல் அவற்றை சட்ட விரோதமாகப் பிடிக்கும் மீனவா்களுக்கு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983, திருத்தம் 2016-ன்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Dinamani
www.dinamani.com