மங்கதேவன்பட்டி ஜல்லிக்கட்டில் 37 போ் காயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 37 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி குழுமிகருப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தொடக்க நிகழ்ச்சிக்கு இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் கோகுல்சிங் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை, கீரனூா், திருவெறும்பூா், மதுரை, காரைக்குடி, மணப்பாறை பகுதிகளைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. மொத்தம் 713 காளைகள் பங்கேற்றன. இதில் ஒரு காளை பலத்த காயமடைந்தது.
காலை 8.30 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்தப் போட்டியில், மொத்தம் 713 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். மொத்தம் 37 போ் காயமடைந்தனா். இவா்களில் 14 போ் மாடுபிடி வீரா்கள், 23 போ் பாா்வையாளா்கள். இவா்களில் 7 போ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மற்றவா்களுக்கு, ஜல்லிக்கட்டு வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றிபெற்ற காளைகள் சாா்பில் அதன் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. கீரனூா் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

