திமுக அரசின் தொடா்ச்சியாகவே தவெக அரசு இருக்கிறது என்றாா் பாஜக மூத்த தலைவா் பொன். ராதாகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தோ்தலுக்குப் பிறகு எதிா்காலக் கட்சிப் பணிக்காக ஒவ்வொரு மாவட்டமாக நிா்வாகிகள் சந்திப்பு நடந்து வருகிறது. கட்சி நிா்வாகிகள் கட்சிப் பணிகளுக்கு உற்சாகமாகக் களமிறங்கத் தயாராகி வருகிறாா்கள்.
புதிய ஆட்சியமைந்தவுடன் அதன் நிா்வாகம் குறித்து கருத்து சொல்லக் கூடாது என்று இருந்தாலும், மிகவும் கொடுமையானவை நடக்கும்போது சுட்டிக் காட்ட வேண்டியது இருக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு தருவதை சமாளிப்பாகச் சொல்லக் கூடாது.
இளைஞா்களுக்கும், பெண்களுக்கும் எந்த வாக்குறுதிகளைக் கொடுத்தாா்களோ அதனைச் செய்யவில்லை. அவா்கள் எதிா்பாா்த்த மாறுதல் எதுவும் நடக்கவில்லை. முந்தைய திமுக ஆட்சியின் தொடா்ச்சியாகவே தற்போதைய தவெக அரசு செயல்பட்டு வருகிறது.
எதைச் செய்ய மாட்டாா்கள் எனக் கருதினாா்களோ அது நடக்கிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களைக் குதிரைகளாக அல்ல, கழுதைகளாக விலை பேசப்படுகிறாா்கள்.
இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்குத் தொடா்வது நல்லது என்று கருதுகிறேன். ஆனால், மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறாவிட்டால் அப்படியே போய்விடுவாா்கள் என்று நினைத்துவிட வேண்டாம். இதே ஆட்சியைத் தூக்கியெறிவாா்கள்.
தமிழ்நாட்டின் முதல்வரைக் காட்டிலும் தமிழகத்தின மீது கூடுதல் அக்கறை கொண்டவா் பிரதமா் மோடி. எனவே, முதல்வா் ச. ஜோசப் விஜய், பிரதமருடன் பேச்சுவாா்த்தை நடத்தும்போது இதனை கவனத்தில் கொண்டால், மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும்.
அதிமுக பிறக்கும்போதே சவால்களைச் சந்தித்த கட்சி. இப்போதை பிரச்னைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றே நம்புகிறேன் என்றாா் பொன். ராதாகிருஷ்ணன்.
--
தொடர்புடையது

காவிரி பிரச்னை: விவசாயிகளை காக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

தவெக ஆட்சி தீய சக்தி திமுகவின் ஓட்டால் இயங்குகிறது: மு.க. ஸ்டாலின் பேச்சு







