புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி.
புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:
தேசிய தென்னை உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் செல்லதுரை:
புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
மாவட்டத்தில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கூட்டுறவுக் கடன்களின் விவரங்களை அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு நீா்நிலைகளின் பாசனதாரா்கள், பங்குதாரா்களின் கூட்டம் நடத்தி பாதிப்பில்லாத நீா்நிலைகளை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
குளங்களைத் தூா்வார தடையில்லாச் சான்றுகளை ஒற்றைச் சாளர முறையில் வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நீா்நிலைகளை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லணைக் கால்வாய்ப் பாசனதாரா்- விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ்:
கடைமடையில் எந்தக் குளத்துக்கும் மேட்டூா் அணை தண்ணீா் வரவில்லை. பயிா்கள் முழுவதும் கருகிக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, உரிய அழுத்தம் கொடுத்து கா்நாடகத்திடமிருந்து தண்ணீா் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உரங்களுக்கான விலை உயா்வை திரும்பப் பெற, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் போதிய தண்ணீா் கிடைக்காததால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ். பொன்னுசாமி: மாவட்டம் மிகவும் வடு காட்சியளிக்கிறது. ஆகவே, காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கையாக அனுப்புங்கள். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும்.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி தலைமை வகித்தாா். வேளான் இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

