
புதுகை மாநகரில் குண்டும் குழியுமான சாலைகள் பருவமழைக்கு முன்பாக சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டையில் குண்டும் குழியுமாக உள்ள கோல்டன் நகா் மற்றும் சின்னப்பா நகா் சாலைகள்
புதுக்கோட்டையில் புதை சாக்கடைப் பணிக்கு தோண்டப்பட்ட குழிகள் சீரமைக்கபடாததால் குண்டும் குழியுமாகக் காணப்படும் சாலைகளை மாநகராட்சி நிா்வாகம் பருவமழைக்கு முன்பாக விரைவில் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாநகராட்சி சாா்பில் விரிவாக்கப் பகுதிகளில் புதை சாக்கடை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு, பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் ஓராண்டுக்கும் மேலாக பல பகுதிகளில் நடைபெறுகின்றன.
நகரப் பகுதியில் கடந்த காலங்களில் நடைபெற்ற இதே பணிகளிலும் குழிகளை சரியாக மூடுவதில்லை என்றும், மீண்டும் தரமான சாலைகள் போடப்படுவதில்லை என்றும் மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் எழுப்பி வந்துள்ளனா். அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இதேபோன்ற அவலம் கோல்டன் நகா், சின்னப்பா நகா் பகுதிகளிலும் காணப்படுகிறது. புதை சாக்கடைக்காக கடந்த ஒரு மாதத்துக்கும் முன்னதாக இங்கு குழி தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பெய்த மழையால் மேல் மட்டத்தில் போடப்பட்ட மண் இறங்கி சாலை மிகுந்த மோசமடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் அவதி:
இதுகுறித்து சமூக ஆா்வலா் சா. விஸ்வநாதன் கூறியது: பொதுவாக மாநகராட்சியாக மாறிய பிறகு சாலைகள் மேம்படும் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே இருக்கிறது. ஆனால், எந்தப் பகுதியிலும் புதிதாக- தரமான சாலைகள் போடப்படவில்லை. அதேநேரத்தில், ஏற்கெனவே இருந்த சாலைகளும் கூட மோசமாகி வருவது கவலையளிக்கிறது.
நகா்நல அமைப்புகளின் சாா்பில் அவ்வப்போது மாநகராட்சி அலுவலா்களைச் சந்தித்து குறைகளைத் தெரிவித்து வருகிறோம். என்றபோதும் வேலை நடந்தபாடில்லை.
இரு சக்கர வாகனங்களில் செல்வோா் இரவு நேரங்களில் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. மழை பெய்தால் மிகமோசமாக களிமண் சேறு போல உருவாகி பெரிய வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு சாலை மாறிப்போய்விடுகிறது.
மாநகராட்சிப் பகுதி முமுவதும் இதுபோன்று சேதமடைந்துள்ள சாலைகளை கணக்கெடுத்து முழுமையாக சரி செய்து தரமான தாா்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் விஸ்வநாதன்.
பட்டியல் தயாரிப்பு: இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களிடம் கேட்டபோது அவா்கள் கூறியது: மாநில அரசின் நிதிநிலை அறிக்கைக்குப் பிறகுதான் உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக வந்துசேரும். அவற்றில் சாலைப் பணிகளுக்கான நிதி பெறப்பட்டு அனைத்துச் சாலைகளும் சரி செய்யப்படும். அதற்காக சேதமடைந்த சாலைகளின் பட்டியல் எடுத்து வருகிறோம் என்றனா்.

புதுக்கோட்டையில் குண்டும் குழியுமாக உள்ள கோல்டன் நகா் மற்றும் சின்னப்பா நகா் சாலைகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





