தமிழ்நாடு உதயமான 61-ஆம் ஆண்டு விழா

தஞ்சாவூரில், மொழிவாரி அடிப்படையில் தமிழ்நாடு உதயமான 61 ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூரில், மொழிவாரி அடிப்படையில் தமிழ்நாடு உதயமான 61 ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு சமஸ்தானங்களாக இருந்த மாநிலங்கள் 1956, நவ. 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.  தமிழ்நாடு உதயமான 61 ஆம் ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ் மாநிலம் உருவாவதற்காகப் போராடிய மங்கலம் கிழார், ஜீவானந்தம், ம.பொ.சி., நேசமணி உள்ளிட்ட தியாகிகளுக்கும், மெட்ராஸ் மாகாணம் என இருந்த இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாருக்கும், தமிழ் மொழி, தமிழ்நாட்டு வளர்ச்சிக்காகப் பாடுபட்டு உயிர் துறந்த தியாகிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், தமிழ் வழிக் கல்வியை முழுமையாகவும், கட்டாயமாகவும் அமல்படுத்த வேண்டும். பெருகி வரும் சம்ஸ்கிருத, ஹிந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுவது, காவிரி நதிநீர் உள்ளிட்ட தமிழ்நாட்டு ஆறுகளை மீட்டெடுப்பது, ஆற்று மணல், தாது மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பது, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட அழிவுத்திட்டங்களில் இருந்து பாதுகாப்பதுடன், விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பது, இந்துத்துவ பாசிச, மத வெறி, காவி வெறிக்கு எதிராக உறுதியுடன் போராடுவது, ஜாதி கடந்த சமதர்ம தமிழ்நாட்டை உருவாக்குவது ஆகிய உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவுக்குத் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இரா. திருஞானம், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டத் தலைவர் வெ. சேவையா, துணைச் செயலர் துரை. மதிவாணன், தமிழர் தேசிய முன்னணி நிர்வாகிகள் மு. முருகையன், சதா. முத்துக்கிருஷ்ணன், ஓய்வு பெற்றோர் சங்கப் பொதுச் செயலர் பி. அப்பாதுரை, தமிழ்நாடு மாணவர் இயக்கப் பொதுச் செயலர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com