தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
Updated on
1 min read

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் தெரிவித்தது:
"பல மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது பாதிப்பு நிலவரம் குறைகிறது எனத் தெரியவந்தது. திருச்சி அருகிலுள்ள 4 மாவட்டங்களில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் வருவதால், அங்கு மட்டும் நிலைமை தொடர்கிறது. அடுத்த 10 அல்லது 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும்.
பொதுவாக, பொதுமக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் படுக்கை வசதியுடன் தனி சிகிச்சைப் பிரிவு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை கிடையாது. இதேபோல, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,113 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் 744 மருத்துவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. உடனடியாக 744 மருத்துவர்களும் நியமிக்கப்படுவர்.
நிலவேம்பு கசாயத்தில் பக்க விளைவு இல்லை: கிண்டியில் உள்ள தெற்காசியாவிலேயே புகழ்பெற்ற கிங்ஸ் ஆய்வகத்தில் பல முறை ஆய்வு செய்யப்பட்டதில் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த நிலவேம்பு கசாயம் உகந்தது எனச் சான்றளிக்கப்பட்டது. குறிப்பாக, நிலவேம்பு கசாயத்தில் ரத்த தட்டுகளை அதிகப்படுத்தும் சிறப்பு இருப்பதாகச் சான்றளித்தனர். நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கக்கூடியது என சித்த மருத்துவர்களும் உறுதியளித்துள்ளனர். அலோபதி தரப்பிலும் ஆய்வு செய்து சான்றளித்தனர். கடந்த 5 ஆண்டுகளாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டதில் எந்தப் பக்க விளைவுகளும் இல்லை, எங்கேயும் எந்தப் புகாரும் இல்லை.  சமூக வலைதளங்களில் அவசர நிலையில் தவறான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம். நிலவேம்பு கசாயம் நூறு சதம் பாதுகாப்பானது, உகந்தது, பாரம்பரியமிக்கது. இக் கசாயம் குறித்து சிங்கப்பூர், மலேசியாவில்கூட கேட்டுள்ளனர் என்றார் விஜயபாஸ்கர்.
உறவினர்கள் புகார்: ஆய்வு முடித்து வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம், உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பார்க்க அனுமதி அளிக்கப்படுவதில்லை, ரத்தப் பரிசோதனை செய்யப்பட்ட விவரங்களும் தெரிவிக்கப்படுவதில்லை என உறவினர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து அவர்களை சிகிச்சைப் பிரிவுக்கு அமைச்சர் அழைத்து சென்று, அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கூறி, சிகிச்சை பெறுவோரிடமும் குறைகள் ஏதும் உள்ளதா எனவும் கேட்டறிந்தார்.
இதையடுத்து, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் அமைச்சர்  மேற்கொண்ட ஆய்வின்போது, வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com