கும்பகோணம் அருகே ஏரகரம் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களை தூர்வாரக் கோரி, ஏரகரம் கதவணை முன்பு விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சாமிநாதன், தங்கையன் ஆகியோர் தலைமை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர. விமலநாதன், சௌந்தர்ராஜன், சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து சுந்தரவிமலநாதன் கூறியது:
ஏரகரம் கிராமத்தில் பழவாற்றில் முதல் மதகு அணையின் மூலம் 555 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 3 கதவு மதகுகள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்தது. ஏரகரம் அ பிரிவு பாசன வாய்க்கால், கண்டகரயம் பாசன வாய்க்கால், சீதேவி பாசன வாய்க்கால், புதுக்குளம் பாசன வாய்க்கால், அர்ஜீன வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் 20 ஆண்டுகளாக ஒரு சொட்டு தண்ணீர் கூட திறக்கப்படவில்லை. இதனால், ஏரகரம், வாளபுரம், பறட்டை ஆகிய கிராமங்களுக்கு தேவையான பழவாறு பாசன நீர் கிடைக்கவில்லை. எனவே, மேற்கண்ட வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி ஏரகரம் கதவணை முன்பு கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









