மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை பூங்கா அருகில் தொடங்கிய இப்பேரணி தெற்கு அலங்கம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்திஜி சாலை, ரயிலடி வழியாகத் தலைமை அஞ்சலகம் முன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேக்கேதாட்டில் அணை கட்ட அனுமதி அளித்த நரேந்திர மோடி அரசைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை செயலாக்கத் திட்டம் தயாரிக்கக் கர்நாடகத்துக்குக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர், கபினி, அர்க்காவதி ஆகிய அணைகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீர், இப்போது நேரே மேட்டூர் அணைக்கு வந்துவிடும். தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் மேக்கேதாட்டில் கர்நாடகம் புதிய அணையைக் கட்டினால், அந்த வெள்ள நீர் முழுவதும் அவ்வணையில் தேக்கப்படும். இந்த வெள்ள நீரை முழுவதுமாகத் தேக்கிக் கொள்ளத்தான் 67 டி.எம்.சி. கொள்ளளவில் மேக்கேதாட்டு அணை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வராது. வேளாண்மைக்கு மட்டுமல்ல, குடிக்கவும் தண்ணீர் கிடைக்காது.
எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதவி விலக வேண்டும். மேலும், மக்களைத் திரட்டி ஜனநாயக வழியில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து கண்டனப் போராட்டங்கள் நடத்த வழிவகுக்க வேண்டும். குறிப்பாக, காவிரிக் காப்பு நாள் என்றொரு நாளை ஏற்படுத்தி, அந்த நாளில் குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை தமிழ் மக்கள் அனைவரும் அங்கங்கே கட்சி வேறுபாடில்லாமல் ஒருங்கிணைந்து கண்டனப் பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்த வேண்டும்.
மத்திய அரசு அலுவலகங்களை ஒரு வாரத்துக்கு முடக்கும் விதமாக முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டும்.
இதில், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் இணைந்து மக்களைத் திரட்டி பங்கேற்க வேண்டும் என்றார் மணியரசன்.
இதில், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தைஅரசன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலர் கி. வெங்கட்ராமன், காவிரி சமவெளி இயக்கத் தலைவர் ச. பழனிராசன், மருத்துவர் இலரா. பாரதிசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலமானாா் வி.டி. ஆஷா ராணி (59)

திருத்தணி முருகன் கோயில் 3-ஆம் தெப்பத் திருவிழா: கூட்டுறவு அமைச்சா் பங்கேற்பு
இளைஞரை தாக்கி பணம் கேட்டு மிரட்டல்: 3 பெண்கள் உள்பட 5 போ் கைது

வரதராஜ பெருமாள் உற்சவா் சிலை சீரமைப்பு பணி நிறைவு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


