தெருவோர வியாபாரிகளின் இடத்தை ஏலம் விடுவதைக் கைவிட வேண்டும் என ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சங்கத் தலைவர் வெ. சேவையா, செயலர் ஆர்.பி. முத்துக்குமரன் உள்பட பலர் அளித்த மனு:
பூதலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்கிப்பட்டி சாலை பேருந்து நிலையம் எதிரில் தெருவோரத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாகத் தெருவோர வியாபாரத் தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் வியாபாரம் செய்கிற இடத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு விரோதமானது. இதில், ஆட்சியர் தலையிட்டு ஏலம் விடும் நடவடிக்கையைக் கைவிட்டு, சட்ட விதிகளின்படி தெருவோர வியாபாரத் தொழிலாளர்கள் வியாபாரம் செய்கிற தரைப் பகுதிக்குக் கட்டணம் நிர்ணயித்து தொடர்ந்து அதே இடத்திலேயே வியாபாரம் செய்ய உதவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு:
ஒரத்தநாடு வட்டத்தில் அதிக இடங்களில் கோடை பருவ நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாமல் கிடக்கிறது. குறிப்பாக, திருமங்கலக்கோட்டை மேலையூரில் 5,000 மூட்டைகள் நெல் தேங்கிக் கிடக்கிறது. கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கிராமியக் கலைஞர்கள் சங்கத்துக்கு இடம் தேவை
தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் நடன நையாண்டி மேள சங்கச் செயலர் ஏ. ராஜேந்திரன் உள்ளிட்ட கலைஞர்கள் அளித்த மனு:
தஞ்சாவூர் வெள்ளைப் பிள்ளையார் கோயில் கீழ அலங்கம் பின்புறம் உள்ள இடத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக வசித்து கலைத் தொழில் செய்து பிழைத்து வந்தோம். தற்போது அந்த இடத்தை அரசுக் காலி செய்து அப்புறப்படுத்திவிட்டது.
இதனால், கலை நிகழ்ச்சிகளை ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் முகவரி தெரியாமல் திரும்பிச் சென்றுவிடுகின்றனர். கீழ அலங்கம் அருகில் உள்ள இடத்தில் கிராமியக் கலைகளையும், கலைஞர்களையும் பாதுகாக்கும் முறையாக எங்களுக்கு 500 கலைஞர்கள் அமரக் கூடிய இடம் ஒதுக்கி, கட்டடம் கட்டித் தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









