எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடந்தையில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் ஊக்கப்பரிசு: இன்று முதல் அமல்

கும்பகோணம் நகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்துக் கொடுப்போருக்கு செவ்வாய்க்கிழமை (மே 1) முதல் ரூ.1,000 மதிப்புள்ள ஊக்கப் பரிசு வழங்கப் போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :1 மே 2018, 3:23 am

கோபாலகிருஷ்ணன்

கும்பகோணம் நகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்துக் கொடுப்போருக்கு செவ்வாய்க்கிழமை (மே 1) முதல் ரூ.1,000 மதிப்புள்ள ஊக்கப் பரிசு வழங்கப் போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கும்பகோணத்தில் சுற்றுப்புறச் சூழல் மாசடையாமல் தடுப்பது,  பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் வாரத்தில் புதன்கிழமை மட்டும் மக்காத குப்பைகள் வாங்கப்படுமென அறிவித்தது. எஞ்சிய நாள்களில் மக்கும் குப்பைகள் வாங்கப்படும். இத்திட்டம் கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி கும்பகோணம் நகராட்சியில் அமல்படுத்தப்பட்டது.
சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் கரிக்குளத்தில் உள்ள குப்பைக் கிடங்கில், உயிரி சுரங்க முறையில் உரமாக்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.  
இதன்படி,  நகரில் உள்ள அனைத்து குடியிருப்புகள், கடைகள், வணிக நிறுவனங்களிடமிருந்து மக்கும், மக்காத குப்பைகள் நகராட்சியின் 500 துப்புரவுப் பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. தொடக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய நிலையில், நாளடைவில் பொதுமக்கள் ஆர்வமின்மையால் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளையும், இதர குப்பைகளுடன் கலந்தே வழங்கி வருகின்றனர். 
இதனால் குப்பைகளை தரம் பிரிக்க முடியாமல் ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கும்பகோணம் நகராட்சி நிர்வாகம், மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவோருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. 
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் கே. உமாமகேஸ்வரி கூறியது: கும்பகோணம் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளில் பெரும்பாலானவை வீடுகளிலிருந்து பெறப்படுகின்றன. குப்பைகளை கையாளும் பெண்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையிலும், அவர்கள் குப்பைகளை சரியாக தரம் பிரித்து வழங்குவதை ஊக்குவிக்கும் வகைலும் சரியாக குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோருக்கு ரூ.1,000 மதிப்புள்ள (ஹாட் பாக்ஸ், பிளாஸ்க் உள்ளிட்ட) அத்தியாவசியப் பொருள்கள் ஊக்கப் பரிசாக வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது. 
வாரம் முழுவதும் சிறப்பாக குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோர் நகராட்சி அதிகாரிகளின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு, அதில் சிறந்த மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வாரத்தில் புதன்கிழமையன்று ஊக்கப்பரிசு வழங்கப்படும். 
இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, குப்பைகளை சரியாக தரம் பிரித்து வழங்கி, கும்பகோணத்தை குப்பையில்லா நகரமாக்க முயற்சிக்கிறோம். ஊக்கப்பரிசுகளை தனியார் நிறுவனங்கள் நகராட்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன. 
வருங்காலங்களில் அதிகப்படியான நன்கொடையாளர்கள் தேர்வு செய்து ஊக்கப்பரிசு வழங்கும் திட்டம் உள்ளது என்றார் அவர்.


நாளொன்றுக்கு 70 டன் குப்பைகள்: கும்பகோணத்தில் உள்ள 45 வார்டுகளிலும் நாளொன்றுக்கு 70 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை 125 தள்ளு வண்டிகள், 61 மூன்று சக்கர சைக்கிள், 5 மினி ஆட்டோ, 4 டிப்பர் லாரி, 12 குப்பை வண்டிகள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்பட்டு, கரிக்குளம் குப்பைக் கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. இதில் சுமார் 50 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளாகும்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை: துப்புரவுப் பணியாளர்ள் சேகரித்து வழங்கும் மக்காத குப்பைகள் அனைத்தும் உலர்கழிவு விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, வாரத்தில் புதன்கிழமை மட்டும் ரூ.60 ஆயிரத்துக்கு மக்காத குப்பைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே கரிக்குளம் குப்பை கிடங்கிலிருந்து மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, அரியலூரில் உள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.