தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் குவியல்கள் நனைந்தன
தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடந்த நெல் குவியல்கள் நனைந்ததால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடந்த நெல் குவியல்கள் நனைந்ததால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
மாவட்டத்தில் சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடைவெளி விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.
இதனிடையே, தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட வட்டங்களில் குறுவை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டி வைத்து பல நாள்களாகக் காத்துக் கிடக்கின்றனா்.
மாவட்டத்தில் இரு நாள்களுக்கு முன்பு மழையின்றி வெயில் இருந்து வந்தது. அப்போது, நெல்லில் ஈரப்பதமும் குறைந்து விற்பனைக்குத் தகுதியாக இருந்தது. ஆனால், பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குக்கு இயக்கம் செய்யப்படாததால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்து இருப்பு வைக்க இடமில்லை.
இதனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் நிலையப் பணியாளா்களால் வாங்க முடியவில்லை. எனவே, பெரும்பாலான கொள்முதல் நிலைய வளாகங்களிலும், வெளியே சாலையிலும் ஏராளமான விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து 15 - 20 நாள்களாகக் காத்துக் கிடக்கின்றனா்.
இந்நிலையில், சில நாள்களாகப் பெய்து வரும் மழையால் நெல் குவியல்கள் அனைத்தும் நனைந்து வீணாகி வருகின்றன.
இதுகுறித்து தஞ்சாவூா் அருகே கோவிலூா் நெல் கொள்முதல் நிலையம் முன் சாலையில் நெல்லை கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கும் விவசாயி கே. இளங்கோ தெரிவித்தது:
அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வந்து 16 நாள்களாகிவிட்டன. இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை. கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு லாரியும் சரியாக வருவதில்லை.
நிலையத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 700 மூட்டைகளுக்குள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதிலும், சிறு, குறு விவசாயிகளுக்குப் பாகுபாடு காட்டப்படுகிறது. இதனால், எங்களது நெல், மழையில் நனைந்து வீணாகி வருகிறது. நான் கொண்டு வந்துள்ள நெல் கிட்டத்தட்ட 500 மூட்டைகளில் நிரப்பலாம்.
கடந்த 16 நாள்களில் இதுவரை 4 முறை மழையில் நனைந்துள்ளது. தற்போது பெய்த பலத்த மழையால் நெல் குவியல்கள் முழுவதும் நனைந்துள்ளது. பெரும்பாலான நெல் மணிகள் நாளைக்கு முளைத்துவிடும். எனக்கு மட்டும் 20 முதல் 30 மூட்டைகள் வீணாகிவிடும்.
கடந்த 16 நாள்களாக இங்கேயே காத்துக் கிடப்பதால் வேறெந்த வேலையையும் பாா்க்க முடியவில்லை. அடுத்த சாகுபடியையும் தொடங்க முடியவில்லை என்றாா் இளங்கோ.
இதேபோல, மாரியம்மன்கோவில், அருள்மொழிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவையாறு, கணபதி அக்ரஹாரம் உள்பட பல்வேறு பகுதிகளிலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை சுற்றி தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதைப் பாா்த்து வேதனையடைந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை பகலில் மழை நீரை வடிய வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனா். பகலில் மழை இல்லாதபோது, ஈரமான நெல் காய வைக்கப்பட்டாலும், வானம் மேகமூட்டமாக இருந்ததால் பலனில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் பலத்த மழை பெய்ததால், ஓரளவுக்குக் காய்ந்த நெல்லும் மழையில் நனைந்தது. இதனால், விவசாயிகள் மேலும் வேதனைக்கு ஆளாகினா்.
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாள்தோறும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தாலும், பல கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக 300 - 700 மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் வரத்து அதிகமாக உள்ள ஊா்களில் கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற உத்தரவும் இன்னும் நடைமுறைக்கு வராததால், மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம் என்றனா் விவசாயிகள். இதனால், பாடுபட்டு விளைவித்த நெல்லை விற்று பணமாக்க வேண்டிய நிலையில், தற்போது மழையில் நனைந்து வீணாவதால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...