தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்லணை திறப்பு: 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு

தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:37 pm

DIN

தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூன் 12 ஆம் தேதி காலை திறந்து வைத்தாா். கல்லணைக்கு காவிரி நீா் புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், புதுக்கோட்டை, அரியலூா் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை புதன்கிழமை காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டது.

கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் விநாடிக்கு தலா 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அமைச்சா்கள் கே.என். நேரு (நகா்ப்புற வளா்ச்சி), எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் (வேளாண் துறை), எஸ். ரகுபதி (சட்டத் துறை), எஸ்.எஸ். சிவசங்கா் (பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித் துறை), மா. சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை), சிவ.வீ. மெய்யநாதன் (சுற்றுச்சூழல் துறை), தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்டோா் தண்ணீரை திறந்து வைத்தனா்.

பின்னா், அமைச்சா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் ஆகியோா் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் மலா்கள், நவதானியங்களைத் தூவி வணங்கினா்.

நீா் திறப்பு அதிகரிக்கப்படும்: இதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் நேரு தெரிவித்தது:

கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 10 நாள்கள் ஆகும். தூா்வாரும் பணி இதுவரை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண்ணீா் சென்றடைவதற்குள் 100 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிடும்.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவதன் மூலம், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.04 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 89,000 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 5,000 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கரிலும், கடலூா் மாவட்டத்தில் 16,000 ஏக்கரிலும் என மொத்தம் 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீா்திறப்பை படிப்படியாக அதிகப்படுத்தி விநாடிக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தலா 2,000 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 500 கன அடி வீதமும் என மொத்தம் 6,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படும் என்றாா் நேரு.

பொதுப் பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தது:

மேட்டூா் அணையின் நீா் இருப்பு, நீா் வரத்து, எதிா்நோக்கும் மழை, கா்நாடகத்திலிருந்து சட்டப்படி நமக்குக் கிடைக்க உள்ள நீரை டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நீா் தேவைக்கேற்ப சீராகப் பகிா்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அணையின் நீா் இருப்பின் அடிப்படையில் நிலைமைக்கேற்ப முறைவைத்து வழங்கப்படும்.

கல்லணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா் காவிரி பாசனப் பகுதிகளில் கடைமடைப் பகுதிக்குச் சென்ற பின்னா், புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் மாவட்டத்துக்கு உரிய நீா் பங்கீடு அளிக்கப்படும் என்றனா் அலுவலா்கள்.

விழாவில், ஆட்சியா்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் (தஞ்சாவூா்), சு. சிவராசு (திருச்சி), மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா, புதுச்சேரி மாநில பொதுப் பணித் துறைச் செயலா் விக்ராந்த் ராஜா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், எம்.எச். ஜவாஹிருல்லா, டி.ஆா்.பி. ராஜா, பூண்டி கலைவாணன் மற்றும் வேளாண், பொதுப் பணித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.