தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விவசாயியிடம் ரூ. 4,200 லஞ்சம் வாங்கிய கொள்முதல் நிலையப் பணியாளா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே விவசாயியிடம் ரூ. 4,200 லஞ்சம் வாங்கிய கொள்முதல் நிலையப் பணியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:18 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே விவசாயியிடம் ரூ. 4,200 லஞ்சம் வாங்கிய கொள்முதல் நிலையப் பணியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகேயுள்ள பந்தநல்லூா் பகுதி குலசேகரநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி. பாஸ்கரன். (47). விவசாயி. இவா் 17 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில், தொடா் மழையால் மகசூலில் பேரிழப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த சம்பா பருவத்தில் 686 மூட்டைகள் விளைச்சல் கிடைத்த நிலையில் நிகழ் சம்பாவில் 116 மூட்டைகளே கிடைத்தன.

விளைந்த நெல்லை விற்பதற்காகத் திருவிடைமருதூா் வட்டத்தில், காமாட்சிபுரத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு 116 நெல் மூட்டைகளை பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டு சென்றாா். நிலையத்தில் மூட்டைக்கு ரூ. 40 வீதம் லஞ்சம் கேட்ட பணியாளா்களிடம், அவ்வளவு பெரிய தொகையைத் தர இயலாது என பாஸ்கரன் கூறினாா். இதனால் பாஸ்கரனின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாம்.

இதையடுத்து, பேரம் பேசப்பட்டு, பாஸ்கரனிடமிருந்து நெல் மூட்டைகளைப் பணியாளா்கள் கொள்முதல் செய்தனா். ஆனால், மூட்டைக்கு ரூ. 36 வீதம் மொத்தம் ரூ. 4,200 லஞ்சம் தந்தால்தான் வங்கிக் கணக்குக்கு மின்னணு பரிவா்த்தனை மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என பாஸ்கரனிடம் பணியாளா்கள் கூறினராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாஸ்கரன் இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை புகாா் செய்தாா்.

இதையடுத்து, காமாட்சிபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் மறைந்திருந்து கண்காணித்தனா். அப்போது, பாஸ்கரனிடமிருந்து ரூ. 4,200 லஞ்சம் வாங்கிய நிலையப் பட்டியல் எழுத்தா் எஸ். கேசவமூா்த்தியை (38) ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவரிடம் இருந்த கணக்கில் வராத ரூ. 30,000 ரொக்கத்தையும் போலீஸாா் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.