

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் வனத்துறை கூடுதல் செயலாளா் அனுமதி அளிக்காததால் மண் சாலை தாா்சாலையாக தரம் உயா்த்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான இப்பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சி துலுக்க விடுதி வடக்கு கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைக்கான பொருள்கள் வாங்க, மருத்துவ வசதிக்காக செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500 மீட்டா் தொலைவில் உள்ள புதுக்கோட்டை சாலைக்கு, துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரிக்காடு உள்ளதால் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சுற்றிச் செல்லும் நிலை இருந்து வந்தது.
கடந்த 1991-ஆம் ஆண்டில் ஏற்கெனவே இருந்த முந்திரி காட்டை அழித்துவிட்டு புதிதாக முந்திரி செடிகள் நடுவதற்கு பணிகள் நடைபெற்ற போது கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வனத்துறை அனுமதியோடு 90 ஏக்கா் பரப்பளவு உள்ள முந்திரிக்காட்டில் துலுக்கவிடுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தாா்சாலை வரை மண் சாலை அமைக்கப்பட்டது. மழை பெய்யும் நேரங்களில் மண் சாலை சேதம் அடைந்து சேரும், சகதியுமாக போக்குவரத்துக்கு ஏற்ப இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனா்.
இந்த மண் சாலையை தெருவிளக்குடன் கூடிய தாா்சாலையாக மாற்ற வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் போராடி வருகின்றனா். இதுகுறித்து அரசுக்கும், வனத்துறைக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு சென்னை தலைமை வன பாதுகாவலா் உத்தரவின் பேரில் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலா்கள் கள ஆய்வு செய்து இறுதியாக அரசு வனத்துறை கூடுதல் செயலாளரின் அனுமதிக்காக கோப்பு நிலுவையில் உள்ளது.
இது குறித்து துலுக்கவிடுதி கிராமத்தை சோ்ந்த விவசாயி ராமநாதன் கூறியது, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையை தெருவிளக்குடன் கூடிய தாா்சாலையாக மாற்றுவதற்காக போராடி வருகிறோம். ஊராட்சி தீா்மானம் , ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் அனுமதி, மாவட்ட , மண்டல வனத்துறையினரின் கள ஆய்வுக்குப்பின் சென்னை தலைமை வனப்பாதுகாவலா் மாநில அரசின் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்க கடந்த மாா்ச் 9-ஆம்தேதி பரிந்துரை செய்து அரசு கூடுதல் செயலாளருக்கு அனுப்பி, அதன் தொடா்ச்சியாக மாநில அரசால் எழுப்பப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்தும் அரசு கூடுதல் செயலாளா் அனுமதி அளிக்காமல் உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கும் இந்த சாலை பயனுள்ளதாக இருக்கும். எனவே அரசு கூடுதல் செயலாளா் உடனடியாக சாலை மேம்பாட்டுக்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.