தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் திங்கள்கிழமை மாலை நேரலை செய்யப்பட்ட துவாரகாவின் உரையைப் பார்த்த உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் திங்கள்கிழமை மாலை நேரலை செய்யப்பட்ட துவாரகாவின் உரையைப் பார்த்த உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர்.

துவாரகாவின் உரை உலக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும்:  பழ. நெடுமாறன் 

பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை உலக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன்.

பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை உலக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன்.

மாவீரர் நாளையொட்டி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா இணையவழி மூலம் திங்கள்கிழமை மாலை உரையாற்றினார். இந்த நேரலை தஞ்சாவூர் விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தது: தமிழின தேசியத் தலைவர் பிரபாகரனின் புதல்வி துவாரகா மாவீரர் நாள் உரையாற்றியுள்ளார். இவரது உரை, பிரபாகரன் எத்தகைய திட்டத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

ஈழத்தமிழர்களுக்கான ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டாலும் கூட, அவர்களுடைய அரசியல் போராட்டம் தொடரும். அதற்கு உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் உதவ முன் வர வேண்டும் என துவாரகா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், சிங்கள மக்கள் எதிரிகள் அல்லர்; நாங்கள் ஒரு நாளும் அவர்களை எதிரிகளாகக் கருதவில்லை. சிங்கள இனவெறியர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தங்களுடைய தன்னலத்துக்காக சிங்கள மக்களிடையே வெறியை ஊட்டி, எங்களுக்கு எதிராக ஏவிவிட்டனர். மற்றபடி நாங்கள் ஒருபோதும் சிங்கள மக்களைக் கெடுத்ததில்லை. எனவே, அரசியல் போராட்டம் தொடரும்; அதற்கு உலகத் தமிழர்கள் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபாகரன் உள்பட அவரது குடும்பமே அழிந்து போய்விட்டது என செய்திகள் வந்தன. இப்போது, அவரது புதல்வி வந்து உலக மக்களிடையே பகிரங்கமாக பேசியுள்ளார். இதை அவராகவே செய்திருக்க முடியாது; இதன் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இள வேங்கை இப்போது உறுமியிருக்கிறது; சின வேங்கை விரைவில் வந்து உறுமும். துவாரகாவின் உரையைக் கேட்ட மக்கள் அனைவருக்கும் எழுச்சியை ஏற்படுத்தும். எல்லோருக்கும் நம்பிக்கையும், புத்துணர்வும் நிச்சயமாக உருவாகும். மீண்டும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு பெருகும். உலக அளவில் ஏறத்தாழ 50 நாடுகளுக்கும் மேலாக தமிழர்கள் வாழ்கின்றனர்.

அவர்களுக்கு இந்த தாய்த் தமிழகம்தான் பாதுகாப்பு. எனவே, தாய்த் தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் தமிழர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு நின்றால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு ஏற்படும். எனவே, உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றார் நெடுமாறன். இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் சி. முருகேசன், சா. ராமன், செயலர்கள் தமிழ்மணி, ஜான் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com