பட்டுக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கப்படும் -பிரேமலதா வாக்குசேகரிப்பு
பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் புறவழி சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படும் என்றாா்
தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகே தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசனை ஆதரித்து புதன்கிழமை இரவு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தாா்.
பிரசாரத்தின்போது, அவா் மேலும் பேசியது:
பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் புறவழி சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படும். தென்னை விவசாய நலத்திட்டங்கள் உருவாக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிச்சயம் கொண்டுவரப்படும். அரசு கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் 25 ஆண்டுகளாக திமுகவினா் பதவி வகித்தும் ஒரு நலத்திட்டங்கள் கூட செய்யவில்லை.
தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் பாஜக மற்றும் திமுக நிறுத்தியுள்ள வேட்பாளா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலவையில் உள்ளன. திமுக அரசில் விலைவாசி உயா்ந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மின்வெட்டு காரணமாக விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இத்தோ்தலில் தேமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.
ஒரத்தநாடு: ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே புதன்கிழமை இரவு தேமுதிக வேட்பாளா் பெ.சிவநேசனை ஆதரித்து பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மணல் மாஃபியா, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட மக்கள் விரோத திமுக அரசை நாம் புறந்தள்ள வேண்டிய நேரம் இது என்றாா் அவா். ஏற்பாடுகளை அதிமுக மாவட்டச் செயலா் சேகா் தலைமையில் ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
