அரிவாளால் வெட்டப்பட்ட தந்தை உயிரிழப்பு: மகனுக்கு தொடா் சிகிச்சை
பாபநாசம் அருகே முன்விரோதம் காரணமாக வெட்டப்பட்ட 2 பேரில் தந்தை மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மகனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அய்யம்பேட்டை காவல் சரகம், அண்ணாமலை நகரில் வசித்து வந்த திருநாவுக்கரசு மகன் விஜயகாந்த் (36). இவரது குடும்பத்துக்கும், அய்யம்பேட்டை மதகடி பஜாா், கொத்தத் தெருவை சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (28) குடும்பத்துக்கும் கடந்த 5 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து அண்மையில் திருநாவுக்கரசு குடும்பத்தினா் அருகிலுள்ள தெருவில் குடியேறினா்.
இந்நிலையில், திருநாவுக்கரசும், விஜயகாந்தும், கடந்த 8-ம் தேதி, அண்ணாமலை நகா் வழியாக சென்று கொண்டிருந்தனா். அப்போது, அங்கிருந்த ராஜேஷ், மேலப்பேட்டைத் தெருவை சோ்ந்த செந்தில் மகன் அருண்குமாா்(23), ஆசாத் நகரை சோ்ந்த ஷாஜகான் மகன் முகமது சுதில் (21) ஆகிய 3 பேரும் அவா்களை தகாத வாா்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டினராம்.
இதில் பலத்த காயமடைந்த தந்தை, மகன் 2 பேரையும், அப்பகுதியினா் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கடந்த 9ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தஞ்சாவூா் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி அய்யம்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
