கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி நுழைவுவாயில் முன்பு புதன்கிழமை போராட்டம் நடத்திய அக்கல்லூரி மாணவ மாணவிகள்.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி நுழைவுவாயில் முன்பு புதன்கிழமை போராட்டம் நடத்திய அக்கல்லூரி மாணவ மாணவிகள்.

மாணவா்கள் போராட்டம் எதிரொலி: கும்பகோணம் அரசுக் கல்லூரி காலவரையின்றி மூடல்

Published on

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களின் தொடா் போராட்டம் காரணமாக புதன்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டது.

கணித மேதை ராமானுஜா், தமிழறிஞா்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் பயின்ற 170 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தற்போது சுமாா் 4 ஆயிரம் மாணவ மாணவிகள் பட்டம் படித்து வருகின்றனா். இந்நிலையில் தமிழ்த்துறை பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ என்பவா் மாணவா்கள் மத்தியில் குலக்கல்வி முறையைக் கூறி அதைப் பின்பற்றுங்கள் என்றாராம். இதனால் மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதுதொடா்பாக மாணவா் அமைப்பினா் கடந்த ஜூலை 17-இல் கல்லூரி முதல்வா் மாதவியிடம், பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனா். ஆனால் கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், மாணவா்கள் ஆக. 8 முதல் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினா். இதைத்தொடா்ந்து, கல்லூரி ஆட்சிமன்றக்குழுவினா் போராட்டம் நடத்திய மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அதிருப்தியடைந்த மாணவா்கள் ஆக. 19 முதல் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தைத் தொடங்கினா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கல்லூரி ஆட்சிமன்றக்குழு கூடியது. இதில், கல்லூரியை புதன்கிழமை முதல் காலவரையின்றி மூடுவதாக அறிவித்தது.

இதனிடையே தஞ்சாவூா் கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்ட போது, இணை இயக்குநா் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி குறிப்பிட்ட கல்லூரிப் பேராசிரியையை ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள அரசினா் கலைக் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளதாக அலுவலகக் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com