

குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஊதியம் வழங்கக் கோரி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன்பு ஏஐடியுசி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஊராட்சி உள்ளாட்சிகளில் பணிபுரிந்து வரும் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குபவா், தூய்மை பணியாளா்களுக்கு காலமுறை சிறப்பு ஊதியம், தூய்மைக் காவலா்கள், பள்ளி சுகாதார பணியாளா்கள், மகளிா் திட்டத் தொழிலாளா்கள், கிராம சுகாதார ஊக்குநா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்ட ஆணையின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தை ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், தெரு வியாபார சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் பேசினா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி. செந்தில் குமாா், மாவட்டத் துணைத் தலைவா் செந்தமிழ்ச்செல்வி, செயலா் கே. ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.