கா்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் விவசாயிகள் மண் சட்டி ஏந்தி ஆா்ப்பாட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை மண் சட்டி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தமிழகத்துக்கு காவிரி நீா் தர மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை மண் சட்டி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் மாதந்தோறும் கொடுக்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். காவிரியில் தண்ணீா் விடாததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு கா்நாடக அரசு ரூ. 1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள் மண் சட்டி ஏந்தி முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக உள்ளே சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்டோா் ஆட்சியா் இல்லாததால், வாயிலில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் கோட்டாட்சியா் செ. இலக்கியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரவீணாகுமாரி மனுவை பெற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, கலைந்து சென்றனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தலைமையில் மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் கே. அன்பு, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கெண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...