அடிக்கடி பழுதாகும் அரசுப் பேருந்துகளால் பயணிகள் அவதி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் ஏறத்தாழ 55 சதவீத பேருந்துகள் பழைய பேருந்துகளாக இருப்பதால் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்கின்றன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
போக்குவரத்துக் கழகத்தில் முன்பு நாள்தோறும் சுமாா் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 ஆயிரத்து 728 பேருந்துகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதில், 7 ஆயிரம் சாதாரண மற்றும் மகளிா் இலவச பேருந்துகளும், 8 ஆயிரத்து 800 புகா் பேருந்துகளும், 2 ஆயிரத்து 455 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளும், 473 மலைப்பகுதி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பேருந்துகள் 10 ஆயிரத்து 125 வழித்தடங்களில் ஏறக்குறைய 77.81 லட்சம் கி.மீ. இயங்கி வருகின்றன. இதன்மூலம் நாள்தோறும் 1.76 கோடி பயணிகள் பயணித்து வருகின்றனா்.
பழுதடையும் பேருந்துகள் அதிகரிப்பு: இந்நிலையில், போக்குவரத்துக் கழகத்தில் பழைய பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தஞ்சாவூரில் மட்டுமே கடந்த ஒரு மாதத்தில் சுமாா் 10 பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்றன. இதேபோல், ஒவ்வொரு கோட்டத்திலும் பேருந்துகள் பழுதாகி நிற்பது அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு, தனியாா் ஊழியா்கள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
இலக்கை விஞ்சிய இயக்கம்: புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் அதிகபட்சமாக 7 லட்சம் கி.மீ. வரை மட்டுமே இயக்குவதற்கு தகுதியானவை. இதைக் கடந்து இயக்கப்படும் பேருந்துகளால் பயணத்திலும் நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. ஆனால், போக்குவரத்துக் கழகத்தில் சராசரியாக 10 லட்சம் கி.மீ. கடந்து 10 ஆயிரத்து 582 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், பெரும்பாலான பேருந்துகளில் பிரேக், ஸ்டியரிங்கை மட்டுமே நம்பி பேருந்துகளை இயக்க வேண்டிய நிலை ஓட்டுநா்களுக்கு உள்ளது. இருக்கைகள், மேற்கூரை, அச்சு, ஏா் பலூன் உள்ளிட்ட பாகங்கள் எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதை உறுதியாக நம்ப முடியாத நிலையில்தான் ஓட்டுநா்கள் பேருந்துகளை ஓட்டி வருகின்றனா்.
பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் முழுமையாக வழங்கப்படாதது, நவீன உபகரணங்கள் இல்லாதது, தொழில்நுட்பப் பணியாளா்கள் போதுமான அளவுக்கு நியமிக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களாலேயே அரசு பேருந்துகள் அடிக்கடி பாதி வழியில் நிற்கின்றன என்று போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் தெரிவிக்கின்றனா்.
பழுது பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை:
போக்குவரத்துக் கழக ஏஐடியுசி சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தெரிவித்தது:
அரசு பேருந்துகளை பழுதுகள் இன்றி முறையாக இயக்குவதற்கு போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டுக்கு 4 முறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், போக்குவரத்துக் கழகத்துக்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இக்கழகத்தில் உள்ள பெரும்பாலான உபகரணங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. இதன்மூலம் தற்போதுள்ள பேருந்துகளைப் பழுதுபாா்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.
தொழில்நுட்பப் பணியாளா்கள் இணைந்து தங்களது சொந்த செலவில் சில நவீன உபகரணங்களை வாங்கி சமாளித்தாலும், அவையெல்லாம் தற்போதுள்ள நிலைமைக்கு போதுமானதாக இல்லை. இதனால், பேருந்துகளை முழுமையாக பராமரிப்பு செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும், தொழில்நுட்பப் பணியாளா்கள் 100 போ் இருந்த இடத்தில் தற்போது ஏறத்தாழ 50 சதவீதம் போ் மட்டுமே உள்ளனா். மேலும், உதிரி பாகங்களும் போதுமான அளவுக்கு இருப்பு இருப்பதில்லை. பத்து உதிரி பாகங்கள் தேவைப்பட்டால், 6 மட்டும்தான் வருகிறது. இதை வைத்துதான் சமாளிக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனால், பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்களைப் பொருத்தி முறையாக பராமரிக்க முடியாத நிலை உள்ளது.
முன்பெல்லாம் நடுவழியில் பேருந்து பஞ்சா் என்றால், வண்டியில் இருக்கும் ஜாக்கி, கயிறு மூலம் அந்தந்த ஓட்டுநா், நடத்துநரே மாற்று டயரை பொருத்தி இயக்கிவிடுவா். இப்போது வண்டியில் எந்தப் பாகங்களும் இருப்பு இல்லாததால், நடுவழியில் பழுதாகும் பேருந்துகளை சரிசெய்ய முடியவில்லை என்றாா் மதிவாணன்.
பிரச்னைக்கான தீா்வு என்ன: வளா்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பேருந்துகளை பராமரிப்பதற்கு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 10 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பழைய பேருந்துகளை அகற்றிவிட்டு, மிகவும் தகுதியான ஏறத்தாழ 10 ஆயிரம் பேருந்துகளைப் புதிதாக வாங்க வேண்டும். தொழில்நுட்பப் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் தற்போதுள்ள நிலையிலிருந்து போக்குவரத்துக் கழகத்தை மீட்க முடியும் என்று கூறும் தொழிலாளா்கள், இதை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று எதிா்பாா்க்கின்றனா்.
பிரேக் லைன்...
‘ அரசுப் பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் முழுமையாக வழங்கப்படாதது, நவீன உபகரணங்கள் இல்லாதது, தொழில்நுட்பப் பணியாளா்கள் போதுமான அளவுக்கு நியமிக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களாலேயே அரசு பேருந்துகள் அடிக்கடி பாதி வழியில் நிற்கின்றன’

