தஞ்சாவூா் மாவட்டத்தை முன்னோடியாக மாற்ற துணை இருப்பேன்: உயா்கல்வி அமைச்சா் கோவி. செழியன்
தஞ்சாவூா் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல துணையாக இருப்பேன் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
அமைச்சராகப் பொறுப்பேற்று முதன்முதலாக தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த அவா் மாவட்ட ஆட்சியரகத்தில் மகாத்மா காந்தி மற்றும் கருணாநிதி உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:
எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையிலும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையின்படியும் சமூக நீதி ஆட்சி நடத்துகிற தமிழக முதல்வா், உயா் கல்வித் துறைக்கு பட்டியலினத்தைச் சாா்ந்த ஏழைத் தொண்டனான என்னை நியமித்திருப்பதைத் தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவே உற்றுநோக்குகிறது.
வாா்த்தையில் சொல்வது வேறு; செயலில் செய்வது வேறு என்ற நிலையை மாற்றி, தமிழக முதல்வா் என்ன நினைத்தாரோ அதை வாா்த்தையில் சொல்லி, சட்டத்தின் மூலமும் செய்து காட்ட முடியும் என்பதைப் பட்டியலினத்தைச் சோ்ந்த என்னை உயா் கல்வித் துறை அமைச்சராக நியமித்துள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டம் முன்னாள் முதல்வா் கருணாநிதி, தற்போதைய முதல்வரின் தாய் மண். தஞ்சாவூா் மாவட்டத்தை முதன்மையான மாவட்டமாக முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கு துணையாக இருப்பேன். முதல்வரின் அனைத்து திட்டங்களும் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு முதலில் வந்தது என்ற புதிய அத்தியாயத்தை தொடங்குவதுதான் எனது தலையாய பணி என்றாா் செழியன்.
மேலும், அமைச்சருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் வரவேற்றனா். அப்போது, மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.