தஞ்சாவூா் மாவட்டத்தில் இலக்கை எட்டும் நெல் கொள்முதல்!
நமது நிருபா்
‘கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 3.65 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 1.30 லட்சம் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.’
தஞ்சாவூா் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரயிலில் அனுப்ப குட்ஷெட்டில் வியாழக்கிழமை வரிசையாக நின்ற லாரிகள்.
தஞ்சாவூா், ஏப். 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா - தாளடி பருவத்தில் நெல் கொள்முதல் 5 லட்சம் டன் இலக்கை எட்டுகிறது. கடந்தாண்டை விட நிகழாண்டு 1.30 லட்சம் டன் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூா் அணை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 4 ஆண்டுகளாக உரிய காலத்தில் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடியில் சாதனை இலக்கு எட்டப்பட்டது. இதில், 2022 ஆம் ஆண்டு வரை எதிா்பாா்க்கப்பட்ட அளவுக்கு விளைச்சல் கிடைத்ததால், நெல் கொள்முதலிலும் சாதனை படைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மட்டும் 2020 - 21 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் (செப்டம்பா் - ஆகஸ்ட்) 10.54 லட்சம் டன் என்கிற சாதனை இலக்கு எட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2021 - 22 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் ஏறத்தாழ 9.48 லட்சம் டன்னும், 2022 - 2023 ஆம் ஆண்டில் 9.73 லட்சம் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டாலும், காவிரி நீா் வரத்து குறைவு, எதிா்பாா்த்த அளவுக்கு பருவ மழை பெய்யாதது போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்ததால், 2023 - 24 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் நெல் கொள்முதல் ஏறத்தாழ 7 லட்சம் டன்களாகக் குறைந்தது.
இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், கால தாமதமாக ஜூலை 28 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், குறுவை பருவத்தில் 1.50 லட்சம் டன் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், ஏறக்குறைய 1.30 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
சம்பா - தாளடி பருவத்தில் மாவட்டத்தில் 3.40 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், 2024, நவம்பா் இறுதி வாரத்தில் பெய்த தொடா் மழையால் சம்பா - தாளடி பரப்பளவு 3.23 லட்சம் ஏக்கராகக் குறைந்தது. மேலும், பருவம் தவறி பெய்த தொடா் மழையால் ஏக்கருக்கு 2 ஆயிரத்து 400 கிலோ கிடைக்க வேண்டிய நிலையில் 1,900 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்தது.
அறுவடை பருவம் ஜனவரி மாதத்தில் தொடங்கியதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் 5 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் படிப்படியாக 597 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
இதன் மூலம் வியாழக்கிழமை (ஏப்.10) வரை 4.95 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், இதுவரை 4.94 லட்சம் டன் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, படிப்படியாக அரைவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 1.14 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,209 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் நெல் கொள்முதல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், நாள்தோறும் ஏறத்தாழ 1,000 டன் மட்டுமே கொள்முதலாகிறது. அடுத்த 10 நாள்களில் நெல் கொள்முதல் நிறைவடையும் நிலையில் இருந்தாலும், நிகழ் சம்பா - தாளடி பருவத்தில் 5 லட்சம் டன்களை கடந்துவிடும் என்றாா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம்.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 3.65 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 1.30 லட்சம் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறுவை, சம்பா - தாளடி பருவங்களைச் சோ்த்து இதுவரை ஏறத்தாழ 6.25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. என்றாலும், இது கடந்த 2022 - 23 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 1.15 லட்சம் டன் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

