மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
மேக்கேதாட்டு அணை கட்ட திட்ட வரைவு அறிக்கையைத் தயாா் செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட திட்ட வரைவு அறிக்கை தயாா் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் திரும்பப் பெற வேண்டும். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தஞ்சாவூரில் நம்மாழ்வாருக்கு சிலையும், நினைவு ஆலயமும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் தெற்கு மாவட்டத் தலைவா் எம். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் கண்டன உரையாற்றினாா். காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா், கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகி பி. கோவிந்தராஜ், திருவையாறு கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகி ஆா். அறிவழகன், வாளமரக்கோட்டை விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோா் பேசினா்.
சங்கத்தின் மாநிலச் செயலா் எம். கருணாநிதி, பொருளாளா் சி. கிருஷ்ணன், மாநில இளைஞா் அணி தலைவா் ஜி. ராஜேஷ்கண்ணன், மாநில மகளிா் அணி தலைவா் இந்திராகாந்தி, மாவட்டச் செயலா் மகேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

