தஞ்சாவூா் - விழுப்புரம் இரட்டை ரயில் பாதை பணியை தொடங்கக் கோரிக்கை!
தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை பணியை விரைவில் தொடங்க வேண்டும் என கும்பகோணம் மகாமகம் பாரம்பரிய அறக்கட்டளை நிா்வாகிகள் மத்திய அமைச்சா்களிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் பாரம்பரிய அறக்கட்டளைத் தலைவா் காமகோடி தலைமையில் அதன் நிா்வாகிகள் மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை புதுதில்லியில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக விழா 2028 -ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் மகாமக குளத்துக்கு புனித நீராட வருவாா்கள். இதனால் கும்பகோணம் பகுதிக்கு போக்குவரத்து அடிப்படை உள்ளிட்ட வசதிகள் அமைக்க வேண்டும்.
குறிப்பாக தஞ்சாவூா்- விழுப்புரம் இடையே ரயில்வே இரட்டை வழிப்பாதை பணியை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
அப்போது, அறக்கட்டளையின் செயலா் பாலசுப்ரமணியன், துணைத்தலைவா்கள் பாலாஜி, வேலப்பன், நிா்வாக செயலா் காா்த்திகேயன், சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

