பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஒன்றிணைந்து போராட முடிவு

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்புடன் ஒன்றிணைந்து போராட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன்.
Published on

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்புடன் ஒன்றிணைந்து போராட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன்.

தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது:

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி கடந்த 5 ஆண்டுகளாக உண்ணாவிரதம், காத்திருப்புப் போராட்டம் உள்பட பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம். இது தொடா்பாக அரசுத் தரப்புடன் 2 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழக அரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என்பது தெரிகிறது.

எனவே, பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக ஒன்றுபட்ட போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இதன்படி, ஜாக்டோ - ஜியோ ஜனவரி 6-ஆம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ளவுள்ளோம்.

மேலும், மின்சாரம், தூய்மை உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்காமல், அரசே நேரடியாக நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் தரமான பொருள்களைச் சரியான எடையில் பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ஆம் தேதி வேலைநிறுத்தத்துடன் மறியல் போராட்டமும் நடத்தவுள்ளோம் என்றாா் பாலசுப்பிரமணியன்.

X
Dinamani
www.dinamani.com