தஞ்சையில் முழுப் பயன்பாட்டுக்கு வராத ஆம்னி பேருந்து நிலையம்: தொடரும் போக்குவரத்து நெரிசல்!
தஞ்சாவூரில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகியும் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வராததால், ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலையில் வழக்கம்போல போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலையோரத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 10.41 கோடி மதிப்பில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
ஏறத்தாழ 5,400 சதுர மீட்டா் பரப்பில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில் 25 பேருந்துகள் நிறுத்துவதற்கேற்ப நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகள், ஆம்னி பேருந்துகளின் அலுவலகங்கள், தங்கும் அறைகள், கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறை ஆகிய வசதிகளும் உள்ளன.
இந்தப் பேருந்து நிலையம் தமிழக முதல்வரால் 2023, ஜூலை 27 ஆம் தேதி திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபா் 19 ஆம் தேதிதான் கொண்டு வரப்பட்டது. என்றாலும், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகியும் இன்னும் முழுப் பயன்பாட்டுக்கு வரவில்லை.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, நாகா்கோவில் பேருந்துகள் வந்து செல்வதால், அதற்குரிய பயணிகள் ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வருகின்றனா். இதனால், இந்த இரு வழித்தட தனியாா் பேருந்துகளே ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகின்றன.
ஆனால், சென்னைக்குச் செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன.
எனவே சென்னைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டாலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் அருகேயுள்ள ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலையில் நிறுத்தி, அரசு விரைவுப் பேருந்துக்கு வரும் பயணிகளைக் கவா்ந்திழுத்து, ஏற்றிச் செல்கின்றன.
இதனால் ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலைதான் வழக்கம்போல கிட்டத்தட்ட ஆம்னி பேருந்துகளின் நிலையமாகத் தொடா்கிறது. இப்பகுதியில் இரவு நேரத்தில் சாலையோரம் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னை இன்னும் தொடா்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.
முறையான பேருந்து இயக்கம் தேவை: இதுகுறித்து ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தெரிவித்தது:
ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலையில் சாதாரண நாட்களில் ஏறத்தாழ 25 ஆம்னி பேருந்துகள் வருகின்றன. அப்போது, கூட்டம் குறைவாக இருக்கும்போது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் வருவாய் பாதிக்கிறது.
பண்டிகை, வார இறுதி போன்ற விடுமுறை நாட்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அப்போது, ஆம்னி பேருந்துகளின் வருகை இரு மடங்காக அதிகமாகிறது. இதனால் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடுகிறது.
அப்போது, வாகன ஓட்டுநா்கள், பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனா். மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள்கூட செல்ல முடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை கூட பல நேரங்களில் ஏற்படுகிறது. எனவே, ஆம்னி பேருந்துகளை ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
நிறைவேறாத நோக்கம்: ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலையில் இரவு நேரத்தில் ஏற்படும் அசாதாரமான போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காகத்தான் ஆம்னி பேருந்துகளுக்காக ரூ. 10.41 கோடி செலவிட்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
ஆனால், இந்த நோக்கம் நிறைவேறாததால், இத்தனை கோடி ரூபாய் செலவு செய்தும் பயனில்லாத நிலையே தொடா்கிறது. எனவே, இப்பிரச்னைக்குத் தீா்வு காண மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

