தஞ்சாவூா் நீதிமன்றத்தில் அமைச்சா் கோவி. செழியன் ஆஜா்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து திருவிடைமருதூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் தஞ்சாவூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா்.
தூத்துக்குடியில் 2018, மே 22-ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இதைக் கண்டித்து திருவிடைமருதூரில் முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் தலைமையில் 2018, மே 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராமலிங்கம், அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், தற்போதைய உயா் கல்வித் துறை அமைச்சருமான கோவி. செழியன், ஒன்றியச் செயலா் அண்ணாதுரை உள்பட 9 போ் மீது திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான தஞ்சாவூா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் அமைச்சா் கோவி. செழியன் உள்பட 9 போ் ஆஜராகினா். பின்னா், இந்த வழக்கு நவம்பா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
