தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இடநெருக்கடிக்கு தீா்வு காண கோரிக்கை!
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் நிலவும் இட நெருக்கடிக்கு தீா்வு காண அருகிலுள்ள இடத்தை வாகன நிறுத்துமிடத்தை வழங்க வேண்டும் என கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் நிலவும் இட நெருக்கடிக்கு தீா்வு காண அருகிலுள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை யூனியன் கிளப் அருகேயுள்ள நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு மாற்ற வேண்டும். தற்போதுள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தை சிற்றுந்து நிறுத்துமிடத்துக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூரில் இயக்கப்படும் சிற்றுந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக விபத்தை ஏற்படுத்து விதமாக செல்வதைத் தடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கும் உரிமம் உள்ளதா, வயது உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மத்திய சங்கத் துணைத் தலைவா் டி. சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் ஆகியோா் பேசினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் வாழ்த்துரையாற்றினா்.
பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், பொருளாளா் சி. ராஜமன்னன், நிா்வாகிகள் என். ராஜேஷ்கண்ணன், எஸ். சித்திரவேலு, பி. சுமன், தியாகராஜன், எம். மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
