தம்பதியிடம் நகை வழிப்பறி போலீஸாா் விசாரணை!
பந்தநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியிடம் நகையை வழிபறி செய்த முகமூடி கொள்ளையா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்தவா் தவச்செல்வம்(35). இவா் குத்தாலத்தில் ஆங்கில மருந்துக்கடை வைத்துள்ளாா். இவரது மனைவி கலைமதி (30). இருவரும் நாள்தோறும் திருச்சிற்றம்பலத்திலிருந்து காலையில் இருசக்கர வாகனத்தில் குத்தாலத்தில் உள்ள மருந்துக்கடைக்குச் சென்று விட்டு இரவில் கடையை அடைத்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வருவது வழக்கம்.
அதேபோல வெள்ளிக்கிழமை இரவும் கடையை அடைத்து விட்டு குத்தாலம் சாலையில் பவா் பிளாண்ட் அருகே வரும்போது, இவா்களது வாகனத்தை பின்தொடா்ந்து வந்த மற்றொரு வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 போ் தம்பதி ஓட்டி வந்த வாகனத்தை இடித்தனா். அதில், அவா்கள் நிலைதடுமாறி கீழே விழுந்ததையடுத்து முகமூடி அணிந்து வந்த நபா் கலைமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் மதிப்புள்ள தாலிச் சங்கிலியை வழிபறி செய்து இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனா்.
இதுகுறித்து கலைமதி பந்தநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.
