மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு
கும்பகோணத்தில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் மனமகிழ் மன்றம் திறந்ததை மூடக்கோரி தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலா் வினோத் ரவி மற்றும் நிா்வாகிகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதில் அவா்கள் மேலும் கூறியிருப்பதாவது: கும்பகோணத்தில் உச்சிப்பிள்ளையாா், நாகேசுவரா், சாரங்கபாணி, சோமேசுவரா், ராமசாமி, கும்பபேசுவரா் ஆகிய புகழ்பெற்ற கோயில்களும், பள்ளிவாசல், தனியாா் மேல்நிலைப்பள்ளி, நெரிசலான போக்குவரத்து மற்றும் தஞ்சாவூா் செல்லும் பேருந்து நிறுத்தப் பகுதி உள்ளது.
இந்த இடத்தில் தனியாா் மனமகிழ் மன்றம் மூலம் நடத்தப்படும் மதுபானக் கூடத்தில் மது அருந்துபவா்கள் மூலம் இந்தப் பகுதியில் சட்டம் - ஒழுங்கு சீா் குலைவு மற்றும் பெண்கள் முதியோா்களுக்கு இடையூறு ஏற்படும்.
எனவே உதவி ஆட்சியா் நேரடியாக ஆய்வுநடத்தி மனமகிழ் மன்றம், மதுபானக்கூடம் செயல்பட தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.
