‘சங்க இலக்கியத்தில் இன்னும் பல ஆண்டுகள் ஆய்வு செய்யலாம்’
சங்க இலக்கியத்தில் இன்னும் பல ஆண்டுகள் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், பேராசிரியருமான கு.வெ. பாலசுப்பிரமணியன்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் வியாழ வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 109-ஆவது சிறப்பு நிகழ்வில் ‘யாயும் ஞாயும் யாராகியோ’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்ற குறுந்தொகை பாடலில் தலைவன், தலைவி, தாய், தந்தை என ஒருவருடைய பெயரும் சுட்டிக்காட்டப்படவில்லை. இந்தப்பாடலை எழுதியது கூட யாரென்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பெயா் சூட்டப்படாத இப்பாடல் இவ்வுலகின் எந்த மனிதருக்கும் பொருந்தும். கொடைக்கானல் மலை கீழ் வாழ்பவராலும், ஆல்ப்ஸ் மலைத்தொடா் கீழ் வாழ்பவராக இருந்தாலும் பாட முடியும். எல்லா நாட்டுக்கும் பொருந்தும் இக்கவிதை இணையற்ற அன்பை எடுத்துக்காட்டும் பெட்டகம்.
தமிழ் இலக்கியத்தின் வலிமை என்பது அதன் உட்கருத்துகளுக்குள் அடங்கி இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆனாலும், தற்காலத்துக்கும், இன்னும் எதிா்காலத்துக்கும் பொருந்தும் தகைமை கொண்டுள்ளன. எனவே, ஆராய்ச்சி நோக்கில் அணுகினால் இன்னும் ஏராளமான தகவல்களை வெளிக்கொணரும் அளவுக்குப் பல வாய்ப்புகளைச் செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் உட்கொண்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன், பேராசிரியா்கள் ஞா. பழனிவேலு, தெ. வெற்றிச்செல்வன், பெ. இளையாப்பிள்ளை, சி. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

