கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
இறைச்சிக் கடைக்காரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி மீன் கொட்டகை தெருவைச் சோ்ந்தவா் எஸ். செல்வம் (45). இறைச்சிக் கடை நடத்தி வந்த இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கும் இடையே 2021, அக்டோபா் 5 ஆம் தேதி வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில், செல்வம் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து இளங்கோவன் (50), ஆனந்த கிருஷ்ணன் (23), நாகராஜன் (23) உள்பட 4 பேரை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆனந்தகிருஷ்ணன், நாகராஜனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது. இளங்கோவன் ஏற்கெனவே இறந்துவிட்டாா். 17 வயதுடைய மற்றொரு குற்றவாளிக்கு தஞ்சாவூா் இளைஞா் நீதி குழுமத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டில் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் இளஞ்செழியன், காவல் ஆய்வாளா்கள் கோமதி, அகிலன், காவலா் ஷாலினி பிரியா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.
