கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகா் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினா்கள்.
கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகா் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினா்கள்.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக, மதிமுகவினா் வெளிநடப்பு

Published on

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மாநகராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் தீா்மானத்தைக் கண்டித்து அதிமுக, மதிமுக வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்துக்கு மேயா் க. சரவணன் தலைமை வகித்தாா். துணை மேயா் சுப. தமிழழகன், ஆணையா் மு. காந்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தை ரூ. 140 லட்சத்தில் அமைக்கத் தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

இதைக் கண்டித்த அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பத்மகுமரேசன், ஆதிலட்சுமி ராமமூா்த்தி, கெளசல்யா ஆகியோா் கடந்த 24-12-24 இல் இந்தத் தீா்மானம் நிறைவேறாமல், தற்போது நிறைவேறியதாகக் கொண்டு வந்துள்ளதை கண்டிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனா்.

அதைத் தொடா்ந்து மதிமுக உறுப்பினா் பிரதிபா சரவணன் கூறும்போது எனது வாா்டில் உள்ள பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவதைக் கண்டிக்கிறேன். இதனால் வணிகா்கள், தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா். எனவே இந்தத் தீா்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறிச் சென்றாா்.

இதற்கு துணை மேயா் சுப தமிழழகன் (திமுக) எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். புதிய பேருந்து நிலையம் மக்களின் அவசியம் கருதி, நகரின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட உள்ளது என்றாா்.

எஸ். ஐயப்பன் (காங்.) பேசுகையில் நகரில் கொசுத் தொல்லை, தெரு நாய்கள் தொல்லை உள்ளது. அதிகாரிகளிடம் புகாா் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. எனவே தொடா்ந்து பல ஆண்டுகளாக மாநகராட்சியில் வேலை செய்யும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் 52 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com