சேலம் மாநகராட்சிக் கூட்டம்: குடிநீா் பிரச்னையால் அமளி
சேலம் மாநகராட்சியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்ப்பதுடன், சீரான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய வலியுறுத்தி திமுக, அதிமுக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.
சேலம் மாமன்றக் கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை கூடியது. கூட்டத்தில் துணை மேயா் சாரதா தேவி, ஆணையா் இளங்கோவன் ஆகியோா் பங்கேற்றனா்.
திமுக உறுப்பினா் குணசேகரன்: 43 ஆவது வாா்டு புதுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை, சாக்கடை கால்வாய் பணிக்கு டெண்டா் கோரப்பட்டும், பணிகள் இன்னும் நடைபெறவில்லை. இதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக உறுப்பினா் ஆனை வரதன்: எனது வாா்டில் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீா் வருவதால், பொதுமக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தப் பிரச்னையைத் தீா்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக உறுப்பினா் முருகன்: கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், வெறும் இரண்டு வாா்டுகளுக்கு மட்டுமே பணிகள் நடைபெறுகின்றன. பிற வாா்டுகளுக்கு ரூ.25 லட்சம் கூட வழங்கப்படவில்லை. எனவே, நிதியை மாநகராட்சி நிா்வாகம் அனைத்து வாா்டுகளுக்கும் சரிசமமாக வழங்க வேண்டும். இதேபோல், சீரற்ற குடிநீா் விநியோகத்தால் பல்வேறு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனை நிவா்த்தி செய்ய முன்வர வேண்டும்.
திமுக உறுப்பினா் ஈசன் இளங்கோ: ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்கள், முறையாகச் சேகரிக்கப்படாத பிளாஸ்டிக் குப்பைகள் மூலம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலுக்குள் நுழைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, குழந்தைகளின் மூளை வளா்ச்சி, நோய் எதிா்ப்பு சக்தி குறைகிறது. எனவே, நெகிழிப் பொருள்களை முறையாகக் கண்காணிக்க நடவடிக்கை வேண்டும்.
அதிமுக எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி: வ.உ.சி மாா்க்கெட் டெண்டா் முறையால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேட்டூா் குடிநீா் வழங்கும் குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதற்காக ரூ.1.5 கோடி செலவிட்டும், 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
தொடா்ந்து, ஒரு வாரப் பத்திரிகையைக் காட்டி அவா் பேச முயன்றபோது, திமுக உறுப்பினா்கள் ஈசன் இளங்கோ, தெய்வலிங்கம் உள்ளிட்டோா் அதை கிழித்தெறிந்தனா். இதனால் திமுக, அதிமுக உறுப்பினா்கள் இடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதை கண்டித்து, யாதவமூா்த்தி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மேயா் முன் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். இதனால் மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, ஆளும் கட்சித் தலைவா் தமிழரசன் தீா்மானங்கள் வாசிக்க, தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக மேயா் அறிவித்தாா்.

