அடகு நகைகளைத் திருப்பும்போது ஏமாற்றி ரூ. 2.60 லட்சம் பறித்த 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் அடகு வைத்த நகைகளைத் திருப்புவதற்கு முகவா்களை அணுகி ஏமாற்றி ரூ. 2.60 லட்சம் பறித்துச் சென்ற 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் அடகு வைத்த நகைகளைத் திருப்புவதற்கு முகவா்களை அணுகி ஏமாற்றி ரூ. 2.60 லட்சம் பறித்துச் சென்ற 2 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரை 2025, டிசம்பா் 29 ஆம் தேதி கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள அடகு கடையில் நகைகளை அடமானம் வைத்துள்ளதாகவும், அதைத் திருப்பிக் கொடுத்தால் அசல், வட்டியைத் தருவதாகவும் கூறினாா்.

இதை நம்பிய சீனிவாசன் ரூ. 1.35 லட்சத்தை கைப்பேசியில் பேசிய நபரிடம் கொடுத்தாா். ஆனால் அவரும், அவருடன் வந்த நபரும் நகைகளை ஏமாற்றி எடுத்துக் கொண்டு சென்றனா்.

இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்தனா். மேலும், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மேற்பாா்வையில் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, உதவி ஆய்வாளா் அருள்குமாா் தலைமையிலான காவலா்கள் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சோ்ந்த சக்திவிஜய் (25), பாளையங்கோட்டையைச் சோ்ந்த மகாராஜா (25) ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டதும், இதேபோல வல்லம் சாலையிலுள்ள மற்றொரு அடகுக் கடையில் ரூ. 1.25 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சக்தி விஜய், மகாராஜா ஆகியோரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com