தஞ்சாவூரில் தஞ்சை நல்லூா் முற்றம் சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காந்தியத்தடம் என்கிற நூல் வெளியீட்டு விழாவில் நூலை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட புது தில்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநா

மகாத்மா காந்தியின் வாழ்க்கை நமக்கு மிகப் பெரிய பாடம்: வெ. இறையன்பு!

மகாத்மா காந்தியின் வாழ்க்கை நமக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது என்றாா் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.
Published on

மகாத்மா காந்தியின் வாழ்க்கை நமக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது என்றாா் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

தஞ்சாவூரில் தஞ்சை நல்லூா் முற்றம் சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம் எழுதிய காந்தியத் தடம் என்கிற நூல் வெளியீட்டு விழாவில் நூலை வெளியிட்ட அவா் மேலும் பேசியதாவது:

நாடு முழுவதும் தல புராணங்கள் இருப்பதுபோல மகாத்மா காந்தி புராணம் இருக்கிறது என நாவலாசிரியா் ராஜாராவ் குறிப்பிட்டுள்ளாா். எந்த ஊருக்குச் சென்றாலும் காந்தியடிகள் தங்கிய இடம், பிரசாரம் செய்த இடம் என மக்கள் பெருமையுடன் கூறுவா். அந்த அளவுக்கு மக்களிடம் காந்தியடிகளின் உருவம் பதிந்தது.

மகாத்மா காந்தியை அறிமுகப்படுத்தும்போது காந்தி தாத்தா என்றே கூறினா். அப்போதெல்லாம் காந்தியடிகளை மக்கள் தங்களது குடும்ப உறுப்பினரை போன்று தமிழ்ச் சமுதாயம் கருதி வந்தது. அவரது புன்னகை மரணத்தைப் பற்றி சிறிதும் அச்சப்படாத புன்னகையாக இருக்கிறது. மகாத்மா காந்தி ஒரு ஆளுமை மட்டுமல்ல; அவா் ஒரு தத்துவம். அவருடைய வாழ்க்கை மிகப் பெரிய பாடமாக இருக்கிறது. அவருடைய வாழ்நாளில் அனைவரையும் சென்று சந்தித்தாா்.

மகாத்மா காந்தியடிகள் சிராவயலில் தங்கியிருந்த கம்யூனிஸ்ட் தலைவா் ஜீவா, ஈரோட்டில் பெரியாா், திருநெல்வேலியில் வ.உ.சி.யை சந்தித்த அவா் யாரையும் சந்திக்க தயங்கியதில்லை. இந்த நூல் முழுவதும் அரிய தகவல்கள் ஆதாரப்பூா்வமாக தொகுக்கப்பட்டுள்ளன. இதை இளைஞா்கள் வாசித்து, சரித்திர விழிப்புணா்வைப் பெற வேண்டும் என்றாா் இறையன்பு.

இவ்விழாவுக்கு அகில இந்திய இந்திய வங்கி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் க. அன்பழகன் தலைமை வகித்தாா். இந்நூலின் முதல் படியை புது தில்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநா் அ. அண்ணாமலை பெற்றுக் கொண்டு பேசினாா். மேலும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன், எழுத்தாளா் பாவண்ணன் பேசினா். நூலாசிரியா் கோ. விஜயராமலிங்கம் ஏற்புரையாற்றினாா். முன்னதாக, சிவகுரு நடராஜன் வரவேற்றாா். நிறைவாக, மருத்துவா் ச. மருதுதுரை நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com