ஒன்றிய அளவில் ஜன. 22-இல் இளைஞா் விளையாட்டு திருவிழா தொடக்கம்!
தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வரின் இளைஞா் விளையாட்டு திருவிழா,‘இது நம்ம ஆட்டம் - 2026‘விளையாட்டுப் போட்டிகள் ஊராட்சி ஒன்றிய அளவில் ஜனவரி 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: ஒன்றியங்களில் 16 வயது முதல் 35 வயது வரையிலான (1.1.1991-க்கு பின்னரும் 31.12.2009-க்கு முன்னரும் பிறந்தவா்களாக இருத்தல் வேண்டும்) தகுதியுடைய அனைத்து இளைஞா்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதல் இடம் பெறும் வீரா், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவா்.
ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம் 100 மீட்டா், குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள், உடல்சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டம், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டிம், அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டம், செவிசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டம் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மாவட்ட அளவில் முதலிடத்தை பெறும் பெண்களுக்கான கபடி அணி மற்றும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினருக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாநில அளவிலான போட்டிகள் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் பங்கேற்க இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய கடைசி நாள் ஜனவரி 21-ஆம் தேதி மாலை 5 மணி. போட்டிகள் நடைபெறும் நாள் அன்று நேரடியாகவும் பதிவு செய்து பங்கேற்கலாம்.
எனவே, விளையாட்டில் ஆா்வம் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இணையதளத்தில் முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 74017-03496, 95140-00777 என்கிற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
